Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவிட்-19 பீதியால் லாபம் ஈட்டும் நிறுவனங்கள்

பிப்ரவரி 18, 2020 11:04

புதுடில்லி: 'கோவிட்-19' வைரசுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை, 1,868 ஆக உயர்ந்துள்ளது; 72 ஆயிரத்து, 436 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், உலக நாடுகள் அனைத்தும், இந்த வைரஸ் குறித்து அச்சத்தில் உள்ளன. இந்த வைரஸ் தந்த அச்சத்தை பயன்படுத்தி, தனியார் விமான நிறுவனங்கள், தங்களது வருவாயை பல மடங்கு பெற்று வருகின்றன.

'கோவிட்-19' தொற்றால் ஏற்பட்டுள்ள உயிர் அச்சத்தால், பெரும் பணக்காரர்கள், மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகின்றனர். அவர்கள் தங்கள் பயணங்களுக்குத் தனி விமானங்களை ஏற்பாடு செய்ய முயற்சிக்கின்றனர். இதற்காக, தனியார் விமான நிறுவனங்களை (Charter Jets/ Charter flight) அணுகுவது அதிகரித்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக் கொண்ட, 'டாரின் வோல்ஸ் பிரைவேட் பிசினஸ் ஜெட்' நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில்:-

பத்து பேர் மட்டுமே அமரக் கூடிய விமானத்துக்கு, ஒரு மணி நேர வாடகையாகக் குறைந்தது, ரூ.4.20 லட்சமும்; நான்கு பேர் அமரக்கூடிய சிறிய ரக விமானத்துக்கு, ஒரு மணி நேரத்துக்குக் குறைந்தது, ரூ.1.68 லட்சமும் கட்டணம் நிர்ணயித்துள்ளோம்.

தற்போது, கோவிட்-19 அச்சத்தால், மக்களுடன் பயணிக்க விரும்பாத பல செல்வந்தர்கள், கட்டணத்தை பொருட்படுத்தாமல் எங்களை அணுகுகிறார்கள். ஆனால், ஆள்பற்றாக்குறையால் அவர்களின் தேவையை எங்களால் உடனடியாகப் பூர்த்தி செய்ய முடியவில்லை.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நிறுவனமான, 'மைஜெட்'டின் ஆசியா தலைமை நிர்வாக அதிகாரி லோகன் ரவிசங்கர் கூறுகையில், ''சார்ஸ் அச்சம் பரவிய, 2003ம் ஆண்டில், தனியார் விமானச் சேவையை அணுகுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்திருக்கிறது. 

ஆனால், கோவிட்-19 அச்சம், அதை விட பல மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த இரு மாதங்களில், 80 முதல் 90 சதவீதம் அளவில், எங்களது சேவை அதிகரித்துள்ளது. இதனால், எங்கள் நிறுவனத்தின் லாபம் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறினார்.

தலைப்புச்செய்திகள்