Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாமக்கல் பகுதியில் மழையின்மையால் மரவள்ளி கிழங்கு விளைச்சல் சரிவு

ஜனவரி 19, 2019 12:13

நாமக்கல் : பருவமழை பொய்த்து போனதால், நாமக்கல் பகுதியில் மரவள்ளி கிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பொட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். தற்போது அறுவடை பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இப்பகுதியில், குங்குமரோஸ் என்ற மரவள்ளி கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக, மரவள்ளி கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கிணற்று நீர் மற்றும் சொட்டுநீர் பாசனம் மூலம் மரவள்ளி கிழங்கு பயிரை விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ₹25 ஆயிரம் செலவு செய்தும், போதிய வருவாய் இல்லை. கடந்த ஆண்டு பெய்த மழையால், ஏக்கருக்கு 15 டன் வரை விளைச்சல் கிடைத்தது. நடப்பாண்டு மழையின்மையால், விளைச்சல் 8 டன்னாக குறைந்து விட்டது.  

மேலும், மாவு சத்தும் குறைந்து காணப்படுகிறது. இதனால் ஜவ்வரிசி உற்பத்தி செய்யும் ஆலைக்கு அனுப்ப முடியாமல், கேரள மாநிலத்திற்கு உணவு பயன்பாட்டிற்காக ஏற்றுமதி செய்து வருகிறோம்.  தற்போது மரவள்ளி கிழங்கில் குங்குமரோஸ், வெள்ளைரோஸ், ஒட்டுரோஸ், விஜயா என 40க்கும் மேற்பட்ட வகைகள் இருந்தாலும், இவற்றில் ஒரு சில வகைகளில் மட்டுமே மாவு சத்து அதிகம் காணப்படுகிறது.  

மற்ற வகைகளில் மிக குறைந்த அளவு மட்டுமே மாவு சத்து உள்ளதால், ஜவ்வரிசி தயாரிப்பாளர்கள், இவ்வகை மரவள்ளி கிழங்கை வாங்க மறுக்கின்றனர். எனவே, வேளாண்மை துறையினர் மாவு சத்து அதிகமுள்ள புதிய மரவள்ளி கிழங்கு வகைகளை கண்டுபிடித்து, அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்