Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பா.ஜனதாவுடன் கை கோர்ப்பதில் எந்த சங்கடமும் இல்லை - ஞானதேசிகன்

மார்ச் 07, 2019 07:52

சென்னை: பா.ஜனதாவுடன் கை கோர்ப்பதில் எந்த சங்கடமும் இல்லை என்று த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் கூறினார். சென்னையில் பிரதமர் மோடி பேசிய பிரசார பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த ஜி.கே.வாசன் படம் திடீரென அகற்றப்பட்டது. இதுகுறித்து த.மா.கா. துணைத்தலைவர் பி.எஸ்.ஞானதேசிகனிடம் கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு. 

அ.தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் கடைசி நேரத்தில் வாசன் படத்தை அகற்றி உள்ளனர். அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் 2 தொகுதி கேட்டிருந்தோம். தே.மு.தி.க. வருவதை பொறுத்து பரிசீலிக்கிறோம் என்றனர். தே.மு.தி.க.வுடன் நேற்று உடன்பாடு ஏற்படாததால் எங்களுக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. 

பேச்சுவார்த்தையில் இழுபறி என்று சொல்லமுடியாது. தொடர்ந்து பேசுகிறோம். இன்று அல்லது நாளை உடன்பாடு ஏற்பட்டுவிடும். 

கேள்வி:- காலங்காலமாக காங்கிரசில் இருந்த நீங்கள், அந்த கொள்கைக்கு நேர் எதிராக நிற்கும் பா.ஜனதா கட்சியோடு கை கோர்ப்பதில் உங்களுக்கு எந்த சங்கடமும் இல்லையா? 

பதில்:- கஷ்டமான கேள்விதான். தலைக்கு மேல் வெள்ளம் போய்விட்டது. காந்தியும், நேருவும் எங்கள் தேசிய தலைவர்கள். நாங்கள் எந்த கட்சியோடு கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் மாறப்போவதில்லை. 

எங்களுக்கு தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மற்றும் கொங்கு மாவட்டங்களிலும் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த தேர்தலில் தனித்து போட்டியிடாமல் போனது நாங்கள் செய்த தவறாகும். 

எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு தேர்தலிலாவது தனித்து நின்று தனது வாக்கு சதவீதத்தை நிரூபித்தால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணி கட்சிகாரர்கள் மதிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார். 

தலைப்புச்செய்திகள்