Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராளுமன்ற தேர்தல் தேதி 9-ந்தேதி அறிவிப்பு

மார்ச் 07, 2019 07:55

புதுடெல்லி: பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வருகிற 9-ந்தேதி வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது. பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டும் மார்ச் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த நிலையில் மத்திய அரசு சில முக்கிய நலத்திட்டங்களை அறிவிக்க உள்ளதால் தேர்தல் அட்டவணை சற்று தள்ளிப் போகும் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் முதல் வாரம் பாராளுமன்ற தேர்தல் அட்டவணை அறிவிக்கப்படும் என்று தகவல்கள் வெளியானது. 

7-ந்தேதி முதல் 10-ந் தேதிக்குள் தேர்தல் அட்டவணையை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருவதாகவும் கூறப்பட்டது. இதை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தங்களை தயார்ப்படுத்தி வந்தன. 

7-ந்தேதி (இன்று) டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நடைபெறுகிறது. மத்திய பா.ஜனதா அரசின் கடைசி கூட்டம் இதுவாகும். எனவே இந்த கூட்டம் முடிந்த மறுநாள் அதாவது 8-ந்தேதி தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் தேர்தல் அட்டவணை வெளியாவது மேலும் தாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கூறுகையில், “பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால்தான் தேர்தல் அட்டவணை வெளியிடாமல் தாமதம் செய்யப்படுகிறதோ என்ற எண்ணம் உருவாகியுள்ளது. மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையமும் மாறி விட்டது” என்றனர். 

காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமதுபடேல் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி தினமும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபடி உள்ளார். அந்த சுற்றுப் பயணத் திட்டம் முடியட்டும். அதன் பிறகு தேர்தல் தேதியை அறிவிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் காத்து இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். 

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

பிரதமர் அலுவலகம் சொல்லியபடி நாங்கள் செயல்படுவதாக கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. பிரதமரின் சுற்றுப்பயண திட்டத்துக்கு ஏற்ப நாங்கள் செயல்படவில்லை. தேர்தல் அட்டவணையை நாங்கள் தயார் செய்து விட்டோம். உரிய நேரத்தில் அது வெளியிடப்படும். 

தேர்தல் அட்டவணையை கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின் போது மார்ச் 5-ந்தேதி வெளியிடப்பட்டது. மே 31-ந்தேதிக்குள் தேர்தல் நடவடிக்கைகளை முடித்து கொள்ள வேண்டியதிருந்ததால் மார்ச் 5-ந்தேதி அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது தேர்தல் தேதியை அறிவிக்க கூடுதல் கால அவகாசம் உள்ளது. 

இந்த தடவை தேர்தல் முடிவுகளை அறிவிக்க ஜூன் 3-ந்தேதி வரை அவகாசம் இருக்கிறது. எனவே தேர்தல் அட்டவணை வெளியிட எங்களுக்கு அவகாசம் உள்ளது. எந்த தாமதமும் இல்லை. இவ்வாறு அந்த அதிகாரி கூறி இருந்தார். 

இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அட்டவணை 9-ந்தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது. 8-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு மேலும் ஒருநாள் தள்ளிப்போகும் என்று கூறப்படுகிறது. 

இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. சில திட்ட அறிவிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கும். 

அந்த ஒப்புதலை அரசிதழில் முறைப்படி வெளியிட ஒருநாள் அவகாசம் தேவை. அதன்படி இன்று மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் நாளை (8-ந்தேதி) அரசிதழில் வெளியிடப்படும். அதன் பிறகு அதற்கு அடுத்த நாளே (9-ந்தேதி) தேர்தல் தேதி அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தெரிய வந்துள்ளது. 

கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த தடவை 10 கட்டங்களாக தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

பாராளுமன்ற தேர்தலுடன் சில மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. காஷ்மீரிலும் சட்டசபை தேர்தலை, பாராளுமன்ற தேர்தலுடன் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 21 சட்டசபை தொகுதிகள் காலி இடமாக உள்ளன. அந்த 21 தொகுதிகளின் இடைத்தேர்தலும் பாராளுமன்ற தேர்தலுடன் நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடக்கத்தில் நடைபெற உள்ளது. 

கோடையை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் முதலில் தேர்தல் நடத்த தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அது ஏற்கப்படுமா? என்று தெரியவில்லை. 

ஆனால் பாராளுமன்ற தேர்தலுடன், 21 தொகுதி சட்டசபை இடைத்தேர்தலும் ஒரே நாளில் நடத்தப்படும் போது தமிழ்நாட்டில் தேர்தல் விறுவிறுப்பு முன்பை விட அதிகமாக இருக்கும். 

தலைப்புச்செய்திகள்