Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும்: மாநில செயற்குழு தீர்மானம்

மார்ச் 01, 2020 03:36

கரூர்: சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என கரூரில் நடந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கரூரில்  நடந்தது. இதற்கு மாநில தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் வல்லத்தரசு வரவேற்று பேசினார். பொருளாளர் பச்சைமுத்து பொதுசெயலாளர் ரெங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில்  நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும்.

சாலை பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுப்பதை கைவிட்டு அரசே ஏற்று நடத்திட வேண்டும். 2019 ஜனவரி 1-ந்தேதி உள்ளவாறு இளநிலை உதவியாளர்  உதவியாளர் கண்காணிப்பாளர் முதுநிலைப்பட்டியலை வெளியிட வேண்டும். முரண்பாடுகளின்றி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி காத்திருக்கும் அனைவருக்கும் சிறப்பு நிகழ்வாக கருதி அவர்களிடமிருந்து விருப்பகடிதத்தினை பெற்று உடன் பணிநியமனம் வழங்கிட வேண்டும்.

மேலும் ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ். மூலம் உட்கோட்ட அளவில் வேலை நிதியில் ஊதியம் பெறும் பணியாளருக்கு ஊதியப்பட்டியல் உள்ளிட்ட இதரப்பட்டியல்கள் தயார் செய்வதில் ஏற்படும் குறைபாடுகளை களைந்து செயல்படுத்துபவர் நிலை சரிபார்ப்பவர் நிலை அனுமதியளிப்பவர் நிலை ஆகியோர் உட்கோட்ட அலுவலர்களான இளநிலை உதவியாளர் கண்காணிப்பாளர் உதவி கோட்டபொறியாளர் ஆகியோர் பதவிகளில் செயல் படுத்திட வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் மாதம் 16-ந்தேதி அன்று அனைத்து நெடுஞ் சாலைதுறை கோட்ட அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது மே 19-ந்தேதி அன்று சென்னையில் நெடுஞ்சாலைதுறை முதன்மை இயக்குனர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு இயக்கம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னாள் மாநில தலைவர் குமார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்