Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆந்திரா பொன்னி நெல் சாகுபடியில் ஏக்கருக்கு 10 மூட்டை தான் கிடைத்தது: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புலம்பல்

மார்ச் 01, 2020 03:37

கரூர்: கரூர் மாவட்டத்தில் ஆந்திரா பொன்னி நெல் சாகுபடியில் நோய் தாக்குதலால் ஏக்கருக்கு 10 மூட்டை தான் கிடைத்தது. எனவே பயிர் காப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி  விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில்  கரூர் மாவட்ட நிலத்தடிநீர் பாதுகாப்பு மற்றும் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் பேசுகையில் கரூர் மாவட்டத்தில் இயங்கி வருகிற சாயப்பட்டறைகளில் இருந்து கழிவே வெளிவராத வகையில் சுத்திகரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கரூர் மாவட்டத்தில் சாயக்கழிவினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டு ஆணையம் பரிந்துரைத்த ரூ.6 கோடியே 36 லட்சம் இழப்பீட்டை சம்பந்தப்பட்ட சாயப்பட்டறைகளின் நிர்வாகம் தான் செலுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டது. ஆனால் 17 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதில் தொடர்புடைய விவசாயிகள் பலர் இறந்து விட்டனர். எனவே அந்த இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என்று கூறினர்.

குளித்தலை கருங்காலப்பள்ளி உழவர் ஆய்வு மன்ற அமைப்பாளர் ராஜேஸ்வரி பேசுகையில்  சத்தியமங்கலம் கிராமம் திம்மம்பட்டி ஊராட்சி ரெத்தினம்பிள்ளைபுதூரில் சாலையை சீரமைக்கும் பணிக்காக அங்கிருந்த சாலை பெயர்த்து எடுக்கப்பட்டது. எனினும் சில மாதங்களாக தொடர்ச்சியாக பணி மேற்கொள்ளப்படாமல் கிடப்பில் உள்ளது. இதனால் அறுவடைக்காக நெல் எந்திரத்தை வயல்வெளிக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. மேலும் நெல் மூட்டைகளை வயலிலிருந்து வெளியே எடுத்து வர முடியாத சூழலும் இருந்தது. எனவே அங்கு விரைந்து சாலைப்பணியை மேற்கொண்டு அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கூறினார்.

கரூர் வீரராக்கியத்தை சேர்ந்த விவசாயி பாண்டியன் பேசுகையில்  கரூர் மாவட்டத்தில் பரவலாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திலிருந்து விதை நெல்லை பெற்று ஆந்திரா பொன்னி ரகத்தை பயிரிட்டோம். இந்த நிலையில் பயிரில் நோய் தாக்குதல் ஏற்பட்டதால் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு ஏக்கருக்கு 30-40 மூட்டைகள் நெல் சாகுபடியாகிற நிலத்தில் 8-10 மூட்டைகள் தான் நெல் வந்திருக்கிறது. எனவே பயிர் காப்பீடு நிவாரண தொகையை பெற்று தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதேபோல்  கரூர் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாக நீர் எடுத்து சாயப்பட்டறைகளுக்கு பயன்படுத்துவதை கண்டறிந்து தடுக்க வேண்டும். அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலான தாந்தோணிமலை ராஜவாய்க்காலை பாசன பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். பெரியாண்டாங்கோவில் தொடங்கி கரூர் நகர் வழியாக செல்லும் இரட்டை வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி மொஞ்சனூர் சந்திரசேகர்  சின்னதேவன்பட்டி தங்கவேல் காவிரிநீர்பாசன விவசாயிகள் நலசங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம்  தாந்தோணிமலை சண்முகம் உள்பட விவசாயிகள்  விவசாய சங்க பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். 

கோரிக்கைளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் வேளாண்மை இணை இயக்குனர் வளர்மதி  கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் வேளாண்மை துணை இயக்குனர்கள் கந்தசாமி  சிவானந்தம்  முன்னோடி விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்