Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குப்பை கிடங்கில் குருபகவான் கற்சிலை: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புலன்விசாரணை

மார்ச் 02, 2020 09:38

திருச்சி: லால்குடி அருகே குப்பை கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தொன்மையான சாமி சிலை மீட்கப்பட்டது. பதுக்கியவர் யார் என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் புலன்விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம்  லால்குடி அருகே உள்ள கோமாக்குடி கிராமத்தில் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தொன்மையான தட்சிணாமூர்த்தி சாமி கற்சிலை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமுக்கு தகவல் கிடைத்தது. 
தகவலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன்  இன்ஸ்பெக்டர்கள் தென்னரசன்  லதா  சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ் செந்தில்குமார் மற்றும் ஏட்டுகள் பாஸ்கரன்  பிரபாகரன் ஆகியோர் லால்குடி அருகே உள்ள கோமாக்குடி கிராமத்திற்கு விரைந்து வந்தனர்.

அந்த கிராமத்தில் ஊர் காட்டேரி என்ற இடத்தில் உள்ள குப்பை கிடங்கில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குப்பை கிடங்கில் இருந்து தொன்மையான குருபகவான் தட்சிணாமூர்த்தி சாமி கற்சிலை மீட்கப்பட்டது.

இந்த சிலையை யார் கொண்டு வந்து பதுக்கி வைத்தார்கள்  எங்கிருந்து சிலை கொண்டு வரப்பட்டது  எந்த கோவில் வழிபாட்டில் இருந்தது  என்பது குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் இன்ஸ்பெக்டர் தென்னரசன் சிலையை மீட்டு சென்னைக்கு கொண்டு சென்றார். மேலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

புலன் விசாரணை அதிகாரியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்  தட்சிணாமூர்த்தி சாமி சிலை எந்த கோவில் வழிபாட்டில் இருந்தது என்றும்  சிலை மாயமானது குறித்து புகார் ஏதேனும் கொடுக்கப்பட்டுள்ளதா  எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சிலை குறித்து தகவல் தெரிந்தவர்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமை 94981-54500 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும்  அதன்பேரில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்