Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரெயில்வே தனியார் மயம் மக்களை சந்தித்து விளக்குவோம்: எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையா பேட்டி

மார்ச் 02, 2020 09:46

திருச்சி: ரெயில்வே தனியார் மயமாக்கல் குறித்து மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம் என எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையா தெரிவித்தார். தெற்கு ரெயில்வே எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலாளர் கண்ணையா சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அவரை திருச்சி ரெயில்வே கோட்ட எஸ்.ஆர்.எம்.யு. செயலாளர் மணிவண்ணன்  துணை பொதுச்செயலாளர் வீரசேகரன் மற்றும் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது நிருபர்களிடம் கண்ணையா  கூறியதாவது: மத்திய அரசு  தனியார் மயமாக்கலை தீவிரப்படுத்தி வருகிறது. ரெயில்வே பணிமனையில் சில மாற்றங்களை கொண்டு வரவும்  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்கிடும் வகையிலும் செயல்பாடுகள் உள்ளது. தற்போது ரெயில்வே துறையில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாமல் போகுமோ  என்ற அச்சம் உருவாகி உள்ளது. 

கடந்த மாதம் ரெயில்வே அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 150 ரெயில்களை வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து இயக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 33 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்படுவதுடன் அதை பராமரிக்கும் செலவு அவர்களது கடமை என்றும்  அதே சமயத்தில் டிரைவர்கள் உள்ளிட்டவர்களை தனியாரே நியமித்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.

இதனால் ரெயில்வே தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படக்கூடும். எனவே  அடுத்த கட்டமாக ரெயில்வே தொழிலாளர்களிடம் பேசி என்ன செய்யலாம் என 2 நாட்கள் திருச்சியில் ஆலோசனை நடத்த இருக்கிறேன். ரெயில்கள் தனியார் மயமாக்கலுக்கு எதிராக நீதிமன்றங்களை அணுக முடியாது. ஏனென்றால்  இது ரெயில்வே அமைச்சகத்தின் நிர்வாகம் சம்பந்தப்பட்டது. இதை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம். இது ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் மக்களின் பிரச்சினை ஆகும். இவர்களையெல்லாம் ஒருங்கிணைந்து குரல் கொடுத்தால்  அதை மத்திய அரசு கேட்கும் என்று நினைக்கிறோம்.

தற்போது பணியில் இருக்கிற ரெயில்வே தொழிலாளர்களையே வெளியில் அனுப்புகிற முயற்சியில் மத்திய அரசு ஈடுபடும்போது  இனி புதிதாக வேலைக்கு ஆட்கள் எப்படி எடுப்பார்கள் என தெரியவில்லை. தற்போது தொழிலாளர் சட்ட மசோதா ஒன்றை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. 

இனி நிரந்தர ஊழியர்கள் என்ற நிலை மாறி கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்யும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள்போல ஒப்பந்த ஊழியர்கள் என்ற நிலை உருவாகலாம். இதை எதிர்ப்பதற்கான ஆயத்த பணிகளை எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் கடந்த ஓராண்டுகளாக செய்து வருகிறது. 
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்