Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.300 கோடி: மீன்வளத்துறை இயக்குனர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு

மார்ச் 03, 2020 08:11

சென்னை: மீனவர்கள் நலனுக்காக, மத்திய அரசிடம், 300 கோடி ரூபாய் எப்போது பெறப்பட்டது; அந்த தொகை எப்படி செலவு செய்யப்பட்டது என்பதற்கு, தமிழக அரசு விளக்கம் அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளான, தமிழக மீனவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மீனவர் நல அமைப்பு மனு தாக்கல் செய்தது. இம்மனு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், வழக்கறிஞர் மதனகோபால் ராவ் ஆஜரானார்.

இலங்கை கடற்படையினரால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க, 300 கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கி இருப்பதாக, பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசிடம் பெற்ற நிதி விபரங்கள், மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து, பதில் மனு தாக்கல் செய்வதாக, சிறப்பு பிளீடர் போத்திராஜ் கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசிடம் பெற்ற நிதி விபரங்கள்; மாநில அரசு செலவு செய்த தொகை; மீனவர்களின் மேம்பாட்டுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது; எத்தனை மீனவர்கள் அடையாளம் காணப்பட்டனர் போன்ற விபரங்களை, மீன்வளத்துறை வழங்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், 300 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கான விபரங்கள், தெளிவாக இடம் பெறவில்லை. 

எனவே, மத்திய அரசிடம் இருந்து, எப்போது நிதி பெறப்பட்டது; அந்த தொகை எப்படி செலவு செய்யப்பட்டது என்ற விபரங்களை, தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும். இரண்டு வாரங்களில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும். வரும், 16ம் தேதி, மீன்வளத்துறை இயக்குனர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தலைப்புச்செய்திகள்