Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் யார்? - கே.எஸ்.அழகிரி

மார்ச் 07, 2019 09:19

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார்? என்பது பற்றி செயற்குழுவும், ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வார்கள் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.  

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். குமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் அவர் காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணியினரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 

ராகுல்காந்தி வருகை தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் விஜயதா திருமண மண்டபத்தில் இன்று நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. 

முன்னதாக கே.எஸ். அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- 

ராகுல்காந்தி வருகிற 13-ந் தேதி குமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளன் மற்றும் பொதுவுடமை கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்ற கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள். வரலாற்று சிறப்புமிக்க கூட்டமாக இந்த கூட்டம் அமையும். 

பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசும்போது காமராஜரை காங்கிரஸ் கட்சி இழிவுபடுத்தி விட்டதாக கூறி உள்ளார். காமராஜர் மனித நேயம் மிக்கவர். அவர் நல்ல மனிதர். பெருமை மிகுந்த தலைவர். அவரை காங்கிரஸ் கட்சி பெருமைப்படுத்தி உள்ளது. அவர் காந்தி, ராஜாஜி ஆகியோருடன் நட்பாக இருந்தார். அந்த நட்பு எப்படிப்பட்டது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். 

அதேசமயம் மோடி தனது கட்சியை சேர்ந்த அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார் என்பது நாட்டுக்கே தெரியும். 

தமிழகத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்டபோது தமிழக முதல்-அமைச்சர், மத்திய அரசிடம் ரூ.1½ லட்சம் கோடி நிவாரண நிதி கேட்டார். பா.ம.க. தலைவரும் அதை வலியுறுத்தி மத்திய அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால் மத்திய அரசு தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி தான் நிவாரணம் வழங்கியது. 

சென்னையில் நடந்த கூட்டத்தில் மோடியுடன் அவர்களும் பங்கேற்று உள்ளனர். அவர்களது கூட்டணி சர்வாதிகாரமான கூட்டணியாக அமைந்துள்ளது. விவசாயிகள், ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு மோடி அரசு எதுவுமே செய்யவில்லை. 

இந்தியாவிலேயே தமிழகம் தான் மாபெரும் தலைவர்களை கொண்ட மாநிலமாக இருந்தது. தற்போது எந்த கொள்கையும் இல்லாதவர்கள் தான் இங்கு உள்ளனர். மாட்டை சந்தையில் விலை பேசுவது போன்ற நிலை தான் நிலவுகிறது. கூட்டணிக்காக நடைபெறும் இதையெல்லாம் இளைஞர் சமுதாயம் புரிந்து கொண்டு விழிப்புணர்வு அடைய வேண்டும். காமராஜர் ஆட்சி விரைவில் அமையும். 

நடிகர் ரஜினிகாந்த் ஏதேதோ அரசியல் செய்கிறார். அவரை சினிமாவில் மட்டும் தான் பார்க்க முடியும். கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் யார்? என்பது பற்றி செயற்குழுவும், ராகுல்காந்தியும் தான் முடிவு செய்வார்கள். மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்துள்ளதால் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது. பா.ஜனதாவுக்கு அவர்களது கொள்கைகள் தான் பலவீனம். மனிதர்களை பிளவுபடுத்தி பார்ப்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. 

ராணுவ அமைச்சகத்தில் இருந்து கோப்புகள் மாயமாகி உள்ளது. அதை கூட பாதுகாக்க முடியாத மோடி அரசு இந்தியாவை பாதுகாக்க முடியுமா? இதை மக்கள் நம்புகிறார்களா? 
இவ்வாறு அவர் கூறினார். 

ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, கட்சியின் செயல் தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. குமரி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் மயூரா ஜெயக்குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் குமார், ரூபி மனோகரன் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தலைப்புச்செய்திகள்