Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒன்றரை மணிநேரம் இருளில் பரிதவித்த அரசு ஆதிதிராவிடர் விடுதி மாணவிகள்

மார்ச் 03, 2020 08:14

வேலூர்: அரசு ஆதிதிராவிடர் விடுதி உள்ளே அனுமதிக்காமல் விரட்டியதால் ஒன்றரை மணிநேரமாக கல்லூரி மாணவிகள் இருளில் பரிதவித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் பில்டர்பெட் ரோட்டில் கல்லூரி மாணவிகளுக்கான அரசு ஆதிதிராவிடர் நல விடுதி இயங்கி வருகிறது. இந்நிலையில் விடுமுறை முடிந்து நேற்றிரவு 7 மணியளவில் விடுதிக்கு திரும்பிய திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளை சேர்ந்த முதுகலை பட்டம் படிக்கும் 2 மாணவிகளை விடுதியில் அனுமதிக்காமல்,  விரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் விடுதி கேட் இழுத்து மூடப்பட்டது. இதனால், மாணவிகள் 2 பேரும் விடுதி வாசலிலேயே நின்றிருந்தனர். அந்த மாணவிகள் இருளில் தனியாக நின்றிருந்ததால், மேலும் 4 மாணவிகள் வெளியே வந்து பாதுகாப்புக்காக அவர்களுடன் நின்றிருந்தனர்.

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ‘விடுதியில் போதிய உணவு அளிக்கவில்லை. இதுகுறித்து கடந்த 27ம் தேதி நாங்கள் கேள்வி எழுப்பினோம். இதனால், எங்களை இன்று(நேற்று) விரட்டிவிட்டனர். இந்த விடுதியில் 49 மாணவிகள்தான் தங்கியிருக்கிறோம். ஆனால், முதுகலை பட்டம் படிக்கும் 55 மாணவிகள், இளங்கலை பட்டம் படிக்கும் 40 மாணவிகள் என மொத்தம் 95 மாணவிகள் தங்கியிருப்பதாக போலியாக கணக்கு காட்டப்படுவதாக தெரிகிறது. மேலும் அரிசியில் எலியின் கழிவுகள் இருக்கிறது. அதை நாங்களே சுத்தம் செய்கிறோம். அதேபோல், போதிய உணவு வழங்காததால் மாணவிகள் சிலர் ஓட்டலில் வாங்கி சாப்பிடுகிறோம். மேலும் விடுதியை தூய்மைப்படுத்த வேண்டிய துப்புரவு பணியாளர் ஜெயசுதா என்பவர், மாணவிகளை விடுதி முழுவதும் தூய்மை செய்யக்கூறி கொடுமைப்படுத்துகிறார். இதற்கு விடுதி வார்டன் செண்பகவள்ளியும் உடந்தையாக இருக்கிறார். மேலும் விடுதி வார்டன் சரிவர பணிக்கு வருவதில்லை. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க உள்ளோம்’ என்றனர்.

இதற்கிடையில் விடுதி துப்புரவு பணியாளர், வார்டனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, மாணவிகளை உள்ளே அனுமதிக்கும்படி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து இரவு 8.30 மணியளவில் மாணவிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விடுதிக்கு செல்லும் தெருவில் மின்விளக்குகள் இல்லை. இதனால், மாணவிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, தெருவில் மின்விளக்கு வசதி செய்வதோடு, சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தலைப்புச்செய்திகள்