Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நான் ஒரு இந்து உறுதிமொழி எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 04, 2020 06:34

சென்னை: இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் 8 வாரத்தில் சுவாமி சிலை முன்பாக நின்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீதரன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ''இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, இந்து சமய அற நிலையத்துறை மற்றும் கோயில்களில் பணிபுரிபவர்கள் இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத் துறையில் பணிக்கு சேரும்போதே செயல் அதிகாரி மற்றும் 2 சாட்சிகள் முன்னிலையில் கோயிலில் உள்ள சுவாமி சிலை முன்பாக நின்று இந்து மதத்தைச் சார்ந்தவன் என்றோ அல்லது இந்து மதத்தின் மீது நம்பிக்கை கொண்டவன் என்றோ உறுதிமொழி எடுக்க வேண்டும்.

ஆனால் இந்து சமய அற நிலையத் துறையில் பணியாற்றும் எந்த அதிகாரியும் இதுபோல உறுதிமொழி எடுக்கவில்லை. இந்து சமய அறநிலையத் துறை சட்டப்பிரிவு 10-ன்படி, அறநிலையத்துறை அதிகாரிகள் இந்து மதத்தைப் பின்பற்றாதவர்கள் என்றால் அவர்கள் அப்பதவியை வகிக்க தகுதியில்லாதவர்களாகி விடுவர்.

எனவே இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவரும் இந்து மதத்தை பின்பற்றுபவர்கள் எனக் கூறி உறுதிமொழி எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்," என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜராகி, "கோயில் அறங்காவலர் முதல் நிர்வாகிகள் வரை அனைவரும் இந்து எனக் கூறி ஏற்கெனவே உறுதிமொழி எடுத்துள்ளனர்.

ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் அவ்வாறு உறுதிமொழி எடுக்கவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டால் உறுதிமொழி எடுக்க தயாராக உள்ளனர்" என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ''இந்து சமய அறநிலையத் துறை விதிகளின்படி அறநிலையத்துறையில் பணியாற்றும் அனைவரும் 8 வாரத்தில் இதுதொடர்பான உறுதி மொழியை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களிலும் இந்த உறுதி மொழியை விதிப்படி இந்து சமய அறநிலையத் துறையில் பணிபுரிபவர்கள் மேற்கொள்ள வேண்டும்" என உத்தரவிட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்