Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

29 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம்

மார்ச் 07, 2019 10:03

மும்பை: தானேயில் 29 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம், கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தானேயில் 29 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம், கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு உள்ளிட்ட திட்டங்களுக்கு மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் தேர்தல் முடியும் வரை, புதிய திட்டங்களை அறிவிக்கவோ, ஒப்புதல் அளிக்கவோ முடியாது. 

இந்த நிலையில் மராட்டிய பா.ஜனதா தலைமையிலான மாநில அரசு ஒரே நாளில் 22 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து உள்ளது. முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் நடந்த மந்திரி சபை கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. 

குறிப்பாக, தானேயில் நியூ தானே - டோங்கிரிபாடா இடையே 29 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் ரூ.13 ஆயிரத்து 95 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தில் 2.2 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் சுரங்கமார்க்கமாக அமைக்கபடுகிறது. 

வடலா - காசர்வடவலி இடையே செயல்படுத்தப்படும் 4-வது மெட்ரோ வழித்தடத்தையும், தானே - பிவண்டி - கல்யாண் இடையே அமைக்கப்படும் 5-வது மெட்ரோ வழித்தடத்தையும் இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த மெட்ரோ வழித்தடத்தில் 22 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைய இருக்கின்றன. 

இந்த திட்டப்பணிகளை தானே மாநகராட்சியுடன் இணைந்து மாநில மெட்ரோ ரெயில் கழகம் செய்கிறது.மேலும் கல்லூரி ஆசிரியர்களுக்கு 7-வது ஊதிய குழுவின் பரிந்துரையின் படி சம்பள உயர்வு வழங்க மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் 26 ஆயிரம் கல்லூரி ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள். சம்பள உயர்வு கேட்டு சமீப காலமாக கல்லூரி ஆசிரியர்கள் போராடி வந்தனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. 

புனே அருகே உள்ள புரந்தர் பகுதியில் சர்வதேச விமான நிலையம் கட்டப்பட உள்ள திட்டத்துக்கும் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. 

இதேபோல மாநிலத்தில் 23 முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மாத உதவித் தொகை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

நாக்பூர் மாவட்டம் கோரடி அனல் மின் நிலையத்தில் புதிதாக 660 மெகாவாட் மின் உற்பத்தி பிரிவை தொடங்கவும் மந்திரி சபை ஒப்புதல் அளித்தது. இந்த திட்டம் 2 கட்டமாக நிறைவேற்றப்படும் என்றும், முதல் கட்ட பணிகள் 45 மாதங்களிலும், 2-ம் கட்ட பணிகள் 51 மாதங்களிலும் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மராட்டியத்தில் தற்போதைய மின்சார தேவை 25 ஆயிரம் மெகாவாட் ஆக உள்ளது. இது 2023-24-ம் ஆண்டில் 27 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மராட்டியம் மின்மிகை மாநிலமாக இருந்தபோதிலும், எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு, புதிய மின் உற்பத்தி திட்டங்களை தொடங்க இருப்பதாக மின்சாரத்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்