Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஒரு சிறுபான்மையினர் கூட பாதிக்கப்பட போவது இல்லை: பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி

மார்ச் 06, 2020 10:48

திருச்சி: குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஒரு சிறுபான்மையினர் கூட பாதிக்கப்பட போவது இல்லை என்று திருச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.திருச்சியில் பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி விவரம் வருமாறு : 1947-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற முகமது அலி ஜின்னா கஷ்டப்பட்டு பாகிஸ்தானை பெற்று விட்டோம்  இனி சிரித்துக்கொண்டே இந்துஸ்தானை பெறுவோம் என்று கூறி இருக்கிறார். நாடு பிளவுபட்டபோது லட்சக்கணக்கான இந்துக்கள் கொலை செய்யப்பட்டார்கள். 

இந்த வரலாறுகளை எல்லாம் 70 ஆண்டுகால காங்கிரஸ் அரசு மறைத்து விட்டது. காங்கிரஸ் மறைத்த உண்மையான வரலாற்றை பள்ளி  கல்லூரிகளில் பாடமாக வைக்கவேண்டும்.
ஜின்னா மறைந்து விட்டாலும் அவர் கூறிய கருத்து இன்னும் மறையாமல் ஆவியாக சுற்றிக்கொண்டிருக்கிறது. அவரது கருத்துக்கு வலுவூட்டும் வகையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். 

நாடு பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று அப்போதே காந்தி கூறினார்.
இதுபற்றி பாராளுமன்றத்தில் பல கட்டங்களில் விவாதம் நடைபெற்றது. ஆனால் சட்டம் தான் இயற்றப்படவில்லை. 2003-ம் ஆண்டு பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்தபோது மன்மோகன்சிங் வெளிநாட்டில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு இதுவரை குடியுரிமை வழங்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். 2018-ல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டத்தை அமல்படுத்தாமல் காலதாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால் இப்போது காங்கிரஸ் கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸ் இந்த பிரச்சினையில் இரட்டை வேடம் போடுகிறது என்பது வெட்டவெளிச்சமாகிறது. தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சியான தி.மு.க.வும் அதனுடன் சேர்ந்து இரட்டை வேடம் போடுகிறது. சமீபத்தில் தி.மு.க.வின் போக்கில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தி.மு.க.வில் இருப்பவர்களில் 90 சதவீதத்தினர் இந்துக்கள் தான் என அக்கட்சியின் ஆர்.எஸ்.பாரதி கூறி இருக்கிறார்.

எனவே தி.மு.க.வை நம்பி இங்குள்ள முஸ்லிம்கள் ஏமாறவேண்டாம். 2 கோடி பேரிடம் கையெழுத்து வாங்கியதாக தி.மு.க. கூறுகிறது. ஒவ்வொருவரும் எத்தனை கையெழுத்து போட்டார்கள் என தெரியவில்லை. குடியுரிமை திருத்த சட்டம் இங்குள்ள மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக தான்  குடியுரிமையை பறிப்பதற்காக அல்ல என்று பிரதமர் மோடி தெளிவாக கூறி இருக்கிறார். பிரதமர் சொல்வதை அனைத்து மக்களும் நம்பவேண்டும். பிரதமரை விட வேறு யாரும் இவ்வளவு பெரிய உறுதியை அளித்து விட முடியாது. குடியுரிமை திருத்த சட்டத்தினால் ஒரு சிறுபான்மையினர் கூட பாதிக்கப்பட போவது இல்லை. பாதிக்கப்பட்டு விடுவோம் என அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்திற்கு ஸ்டாலின் ஏன் செல்லவில்லை  டெல்லியை போல் இங்கும் கலகம் ஏற்பட்டு பல உயிரிழப்பு ஏற்படாதா என அவர் நினைக்கிறார். தமிழகத்தில் முஸ்லிம்கள் நடத்தும் போராட்டங்களை அ.தி.மு.க அரசு நன்றாக கையாண்டு வருகிறது. தமிழக அரசின் செயல்பாடு இன்னும் சிறப்பாக இருக்கவேண்டும். தமிழகத்தில் இருக்கிற முஸ்லிம்கள் முஸ்லிமாகவும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவராகவும் இந்துக்கள் இந்துவாகவும் இருக்கவேண்டும். மதமாற்றம் கூடாது. இந்நிலை மாறாமல் இருக்க மதமாற்ற சடை சட்டம் கொண்டு வரப்படவேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். தி.மு.க. செய்து வரும் விமர்சனங்களால் தமிழகத்தில் பாரதீய ஜனதா நன்றாக வளர்ந்து வருகிறது. டெல்லி மாநிலங்களவை உறுப்பினர் பதவி பா.ஜ.க.வுக்கு வழங்கவேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதற்காக மன்ற நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உள்ளார். அதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்கி  தனது கட்சியின் கொள்கைகள் என்ன என்பதை அறிவிக்கட்டும். அதன் பின்னர் அவருடன் கூட்டணி ஏற்படுத்துவது பற்றி பார்க்கலாம். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

தலைப்புச்செய்திகள்