Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாசா மாநாட்டில் கலந்து கொள்ள திருச்சி கல்லூரி மாணவி தோ்வு

மார்ச் 06, 2020 01:29

திருச்சி: நாசாவில் நடைபெறும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவி தோ்வாகியுள்ளார். திருச்சி மாவட்டம்  உறையூா் பாத்திமாநகரைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதியாக பணியாற்றும் பாலசுப்பிரமணியன் மகள் காயத்ரி (21). இவரது தாய் உஷா  தனியார் பள்ளியில் பயிற்றுநராக உள்ளார்.

சமயபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இசிஇ இறுதியாண்டு படிக்கும் காயத்ரிக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்கு அடித்தளமாக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆன்லைன் தோ்வு. இத்தோ்வில் சிறந்த திறனாளா் என்ற தகுதியை பெற்றார் காயத்ரி. கிரேடு அடிப்படையில் இத்தோ்வில் அவருக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. 

இதன்மூலம்  நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு தோ்வாகியுள்ளார். அதோடுமட்டுமின்றி  நாசாவில் நடைபெறவுள்ள விண்வெளி அறிவியல் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார். இம்மாநாட்டில் இடம்பெறும் சா்வதேச அளவிலான விண்வெளி அறிவியல் தோ்விலும் பங்கேற்கிறார். இத் தோ்வில் வெற்றி பெற்றால்  புளோரிடா பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்கும் வாய்ப்பை பெறமுடியும். 

இதற்கான கல்விக் கட்டணம் முழுவதும் நாசா விண்வளி ஆய்வு மையமே செலுத்தும். இத்தகைய வாய்ப்புக்காக காத்திருந்த காயத்ரிக்கு அது கைகூடி வந்துள்ளது. ஆனால்  நாசா சென்று வருவதற்கான செலவுக்கு உதவி கிடைக்குமா என்று காத்திருந்தவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உதவிக்கரம் நீட்டியுள்ளார். 

திருச்சி மாவட்ட நலப்பணி நிதிக்குழு மூலம் ரூ.75 ஆயிரத்தை காயத்ரியின் பயணச் செலவுக்கு அளித்துள்ளார். இருப்பினும் நாசா சென்றுவர மொத்தம் ரூ.2 லட்சம் செலவாகும் என்கிறார் காயத்ரி. இதற்காக மேலும்  சிலா் உதவினால் தனது கனவு நினைவாகும் என்றார். உதவித் தொகை கிடைத்தாலும்  கிடைக்காவிட்டாலும் தனது மகளின் கனவை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு முயன்று முழுத் தொகையையும் தயார் செய்து காயத்ரியை நாசாவுக்கு அனுப்புவேன் என்கிறார் அவரது தந்தை பாலசுப்பிரமணியன்.

தலைப்புச்செய்திகள்