Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

31 ஆண்டுகளுக்கு முன் மாயம் ஒரத்தநாடு வாலிபர் சென்னையில் மீட்பு

மார்ச் 08, 2020 11:36

தஞ்சை: 31 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன ஒரத்தநாடு வாலிபரை சென்னையில் காவல்துறையினர் மீட்டு ஒப்படைத்தனர். 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா ஒக்கநாடு மேலையூர் கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் நாகமுத்து - வளர்மதி தம்பதிகளின் மூத்த மகன் வெற்றிச்செல்வன்.  இவர் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டை விட்டு திடீரென காணாமல் போய்விட்டார். காணாமல் போன மகனை தேடி பெற்றோர் தேடி அலைந்தனர். முடிவாக வெற்றிச்செல்வன் இறந்திருக்கலாம் என்று பெற்றோர் நினைத்து இருந்த நிலையில் நாகமுத்துவும் இறந்துவிட்டார்.

இதனால் வளர்மதி தன் மற்ற குழந்தைகளோடு அவரது உறவினர் பிச்சைமுத்து என்பவரின் இல்லத்தில் வாழ்ந்து கொண்டிருந்தார். கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த வளர்மதிக்கு திடீரென ஒரு கடிதம் வந்தது. சென்னை கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் இருந்து வெற்றிச்செல்வன் தனது தாய் தந்தையரை பார்க்க விரும்புவதாகவும் உடனே ஏற்பாடு செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த உறவினர்கள் அந்த கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மகாலிங்கம் மற்றும் சென்னை வழக்கறிஞர் சரவணன் ஆகியோர் சென்னைக்கு சென்று வெற்றி செல்வனை மீட்டு அழைத்து வந்தனர். 31 ஆண்டுகள் சமையல் வேலை செய்து வந்த வெற்றிச்செல்வன் சென்னை கொளத்தூர் சிவசக்தி நகரிலுள்ள சகாயமேரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.

31 ஆண்டுகளுக்குப் பின்பு தனது மகன் கிடைத்த ஆனந்த கண்ணீரில் வளர்மதி கதறி அழுதார். தனது தாய்க்கும் தனது உறவினர்களுக்கும் ஆறுதலாக கிடைத்த வெற்றிச்செல்வன் தனது தந்தையை பார்க்க முடியாத ஏக்கத்தில் கண்ணீர் விட்டார். 31 ஆண்டுகளுக்கு பிறகு தங்கள் கிராமத்திற்கு ஒரு வாலிபன் கிடைத்ததில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து சென்று பார்த்தனர்.

தலைப்புச்செய்திகள்