Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்பலமாகும் யெஸ் வங்கி நிறுவனர் ராணாவின் 2 ஆயிரம் கோடி முதலீடு

மார்ச் 08, 2020 04:43

மும்பை: யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூரும் அவரது குடும்பத்தினரும் 20 க்கும் மேற்பட்ட ஷெல் (போலியான)நிறுவனங்களை அமைத்து சொத்துக்களை சட்டவிரோதமாக முதலீடு செய்வதற்கு பயன்படுத்தியதாக, அமலாக்க இயக்குநரகம் (ED) கண்டறிந்துள்ளது. இந்நிலையில் ரானாவை வரும் 11ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரக்க மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

யெஸ் வங்கி தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.கடனை திருப்பி செலுத்த திறன் இல்லாதவர்கள் மற்ற வங்கிகள் கடன்தர முன்வராத பல நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கியிருக்கிறது. இதன் காரணமாக வாரா கடன் அதிகரித்துள்ளது.

எஸ்ஸார் ஷிப்பிங், மெக்லாய்ட் ரஸ்ஸல். ஐஎல் அண்ட் எஃப்எஸ், ஏடிஏஜி குழும நிறுவனம், காக்ஸ் அண்ட் கிங்ஸ், சிஜி பவர், டிஹெச்எஃப்எல், உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டும் யெஸ் வங்கி ரூ.10,206 கோடிக்குமேல் கடன் கொடுத்திருக்கிறது. இந்த நிறுவனங்கள் கடனை இன்னமும் திருப்பி செலுத்தவில்லை. இதனால் யெஸ் வங்கியின் வாராக்கடன் கடுமையாக அதிகரித்துள்ளது.

வாராக்கடன் பெரிய அளவில் அதிகரித்து திவால்நிலையை நோக்கி சென்றதால் யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி எடுத்துக்கொண்டுள்ளது. தற்போது சீர் திருத்த நடவடிக்கைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டு வருகிறது. முதற்கட்டமாக வங்கியில் பணம் போட்ட மக்கள் அடுத்த மாதம் 3ம் தேதி வரை ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுக்க தடை விதித்துள்ளது.

மறுபுறம் அமலாக்கத்துறை யெஸ் வங்கி நிறுவனர் ராணாவின் மும்பை இல்லத்தில் வெள்ளிக்கிழமை முதல் சோதனை நடத்தி வந்தனர். இறுதியில் அவரை சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தில் கைது செய்தார்கள். அவரிடம் நடத்திய விசாரணையில் கடன் கொடுக்க தகுதியில்லாத பல நிறுவனங்களுக்கு தாரளமாக கடன் வழங்கி மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.

அதேபோல் ராணாவும் அவரது குடும்பத்தினரும் 2000 கோடி அளவுக்கு லண்டனில் முதலீடு செய்திருப்பதும் 20க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை நடத்தி அதற்கு கடன் அளித்து அந்த பணத்தை சட்டவிரோதமாக அவர்களின் சொத்துக்களில் முதலீடு செய்ய பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராணா கபூரின் மனைவி பிந்து, மகள்கள் ராகி கபூர் டான்டன், ரோஷினி கபூர், ராதா கபூர் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தில் உள்ளனர்.

இதையடுத்து ராணாவை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல உண்மைகள் வரும் என்று நினைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து வரும் 11-ம் தேதிவரை ராணாவை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்