Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தராதது ஏன்?: விஜயகாந்த் மகன் பேச்சு தான் காரணம்: அ.தி.மு.க.

மார்ச் 11, 2020 07:00

சென்னை: கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசிய பேச்சு, அத்துடன் தே.மு.தி.க.வின் அண்மைக்கால போக்கு ஆகியவற்றால் அதிருப்தி அடைந்த அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி. தேர்தலில் சீட் தரவில்லை என்று அ.தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம் பா.ஜ.க. ஆதரவால் வாசனுக்கு சீட் தந்ததாக கூறப்படுகிறது. ராஜ்யசபா தேர்தலில் எப்படி சீட் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. இருந்தது. ஆனால், தே.மு.தி.க.வுக்கு பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. கடைசி வரை கிடைக்கும் என்று நம்பிக்கொண்டிருந்த தே.மு.தி.க. எம்.பி. சீட் கிடைக்காததால் கடும் ஏமாற்றம் அடைந்துள்ளது. 

இந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. துணைச் செயலாளர் சுதீஷ், அ.தி.மு.க. அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராஜ்யசபா எம்.பி. சீட் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது என்றார். இதனிடையே ராஜ்யசபா எம்.பி. சீட் கிடைக்காத விரக்தியில் இருக்கும் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் தொடர்வதா? அல்லது வெளியேறுவதா? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அ.தி.மு.க.வோ வேறு ஒரு சமயத்தில் பார்க்கலாம் என்று சமாதானம் செய்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் கும்பகோணத்தில் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் பேசும் போது, தே.மு.தி.க.வுக்கு கு இரண்டு சதவிகிதம் வாக்கு உள்ளது என்றும், விஜயகாந்த் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் நிர்வாகிகள் தொய்வு அடைந்திருப்பதாகவும் சொல்கிறவர்கள். ஏன் எங்கள் வீட்டுவாசலில் கூட்டணிக்காக நின்றார்கள். எங்களிடம் வைத்துக்கொள்ள வேண்டாம். கொடுப்பதை வாங்கும் கட்சி இல்லை. நாங்கள் ஓங்கி கொடுக்கும் கட்சி. வரும் சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் இல்லாமல் உங்க ஆட்சி இல்லை என்று கடுமையாக பேசினார். 

அவரது பேச்சு சில இடங்களில் ஒருமையில் இருந்தது. இதை கண்டு அ.தி.மு.க.வினர் உட்பட தலைமையும் அதிருப்தி அடைந்தது. அத்துடன் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தின் அண்மைக்கால பேச்சுக்களும் அ.தி.மு.க.வினருக்கு அதிருப்தியை தந்துள்ளது. இதனால் வாக்குவங்கி இல்லாத தே.மு.தி.க.வுக்கு முக்கியத்துவம் ஏன் கொடுக்க வேண்டும்? என்று அ.தி.மு.க.வினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. இதையடுத்தே அ.தி.மு.க. தலைமை தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா எம்.பி. சீட் தரவில்லை என்று கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்