Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆளுநருக்கு அதிகாரமில்லை என முதல்வர் பேட்டியின்போதே ராஜ்நிவாஸில் கூட்டம் நடத்திய கிரண்பேடி

மார்ச் 12, 2020 12:39

புதுச்சேரி: அதிகாரிகளை வைத்து கூட்டம் நடத்த உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆளுநருக்கு அதிகாரமில்லை என்று முதல்வர் நாராயணசாமி பேட்டியளிக்கும்போதே ராஜ்நிவாஸில் அதிகாரிகள் கூட்டத்தை ஆளுநர் கிரண்பேடி நடத்தினார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் மூன்றரை ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் நேற்று தீர்ப்பு வெளியானது. அதில் கூட்டாட்சி தத்துவத்தின்படி இணைந்து இருவரும் செயல்பட அறிவுறுத்தப்பட்டிருந்தது. இச்சூழலில் முதல்வர் நாராயணசாமி இத்தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களை இன்று சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கமிட்டி அரங்கில் சந்தித்து தீர்ப்பின் முக்கிய அம்சங்களை தெரிவித்தார்.

நீதிமன்றம் இருவரும் இணைந்து செயல்பட அறிவுறுத்தியுள்ளதே என்று கேட்டதற்கு, ஆளுநர் அமைச்சரவைக்கு தெரியாமல் அதிகாரிகளை அழைத்து பேசி தன்னிச்சையாக உத்தரவிடுவதுதான் கருத்து வேறுபாடுக்கு முக்கியக்காரணம். ஆவணங்களை துறை செயலர் மூலமாக கோரி, முதல்வர் வழியாக ஆளுநருக்கு தரவேண்டும் என்றே உயர்நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. அதேபோல் அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது-தான் பிறப்பிக்கும் உத்தரவுபடி செயல்பட அதிகாரிகளுக்கு உத்தரவிட முடியாது என்று தெளிவாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்த ஆளுநருக்கு அதிகாரமில்லை" என்று குறிப்பிட்டார்.

செய்தியாளர் சந்திப்பு நடக்கும் வேளையில் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸில் ஆளுநர் கிரண்பேடி தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அனைவரும் பங்கேற்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அதை தனது வாட்ஸ்அப்பிலும் கிரண்பேடி பகிர்ந்திருந்தார். இதை முதல்வரிடம் கேட்டதற்கு, "தீர்ப்பு வந்து அதன் முழு விவரத்தையும் தற்போதுதான் படித்துள்ளோம். தீர்ப்பு முழு விவரம் அதிகாரிகளுக்கு தெரியாது. தீர்ப்பு விவரத்தை அடிப்படையாக கொண்டு அனைத்து அதிகாரிகளுக்கும் அதன் அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும், அதன்படி நடைபெறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாகும். நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக மக்கள் ஆட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்