Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தி.மு.க. பொதுக்குழு தேதி திடீர் மாற்றம்: பின்னணியில் முதன்மை செயலாளர் நேரு

மார்ச் 18, 2020 01:52

சென்னை: தி.மு.க. பொதுக்குழு வரும் 29-ம் தேதியன்று நடைபெறவிருந்த நிலையில் நேற்றிரவு திடீரென ரத்து செய்யப்பட்டு பொதுக்குழு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் தி.மு.க. முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளதாக கூறப்படுகிறது. 

பொதுக்குழு தேதி மாற்றத்துக்கு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தான் காரணம் என்றாலும், அதில் நேருவுக்கும் ஒரு சிறிய பங்குண்டு. கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் நினைவுநாள் மார்ச் 29-ம் தேதியன்று அணுசரிக்கப்படுவது வழக்கம். இதனால் உலகில் எங்கிருந்தாலும் மார்ச் 29-ம் தேதியன்று திருச்சியில் தான் இருப்பார் கே.என்.நேரு.

அன்றைய தினம் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள கேர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தனது தம்பி கே.என்.ராமஜெயம் முழு உருவ சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது நேருவின் வழக்கமாகும். மேலும், தனது ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்யும் அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் மார்ச் 29-ம் தேதியன்று கலந்துகொள்வார். இதுமட்டுமல்லாமல் நேருவின் ஒட்டுமொத்த குடும்பமும் அன்றைய தினம் ஒன்று கூடும்.

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் மற்றும் புதிய பொருளாளர் தேர்வுக்காக மார்ச் 29-ம் தேதியன்று பொதுக்குழு நடைபெறும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துவிட்டார். இதனால் தர்மசங்கடத்துக்கு உள்ளான நேரு, பொதுக்குழுவுக்கும் செல்ல வேண்டும், திருச்சியில் தம்பி சிலைக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அதனை மு.க.ஸ்டாலினிடம் நேரு வெளிப்படையாக கூறவில்லை. இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் 31-ம் தேதி வரை பொதுவிடங்களில் கூடுவதை தவிர்க்குமாறு இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. 

தமிழக அரசும் அதனை ஏற்று அனைத்து பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள், மால்களை மூடுமாறு உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் தான் தி.மு.க. நிகழ்ச்சிகளையும் மார்ச் 31-ம் தேதி வரை ஒத்திவைக்கலாமா என நேரு, துரைமுருகன் போன்றோரிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். இதற்காகவே காத்திருந்தது போல் நேரு தலையாட்ட, கூடவே தனது தம்பி நினைவுநாள் விவகாரத்தையும் எடுத்துச்சொல்ல உடனடியாக பொதுக்குழு தேதி மாற்றம் என அறிவிப்பு வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்