Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக அரசியல் களத்தில் சிறப்பான எதிர்காலம் யாருக்கு?

மார்ச் 18, 2020 02:40

-நமது சிறப்பு நிருபர்-

வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அ.தி.மு.க. பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல், தி.மு.க. அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்து ஆட்சியை பிடிக்க போராடி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் ரஜினிக்கு17.81% பேரும் விஜய்க்கு 39.65% பேரும் ஆதரவு தெரிவித்திருப்பதால் அ.தி.மு.க. தி.மு.க. கலக்கத்தில் உள்ளது.

விஜய் - ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து தற்போது மக்களை பேச வைத்து வருகிறது. பேசி பேசியே அதிர வைத்து வருகிறார் ரஜினிகாந்த். எதுவுமே பேசாமல் சிந்திக்க வைத்து வருகிறார் விஜய். அதனால்தான் விஜய், ரஜினிகாந்த் இருவரில் உங்கள் ஆதரவு யாருக்கு என்ற கேள்வியை முன்வைக்க. விஜய்க்கு அதிகமான வாக்குகளை செலுத்தி உச்சத்தில் வைத்துள்ளனர்.

டெல்லி தந்த அழுத்தம்தான், விஜய் வீட்டில் நடந்த ரெய்டு என்பதுதான் பெரும்பாலானோரின் கருத்தும், வருத்தமும். ஆனால் ரெய்டு நடத்த வேண்டும் என்பது பிளான் இல்லை. கிட்டத்தட்ட ஒரு வருஷமாக விஜய்யை குறிவைத்திருந்தனராம் ஐ.டி. அதிகாரிகள். மெர்சல் பட ஆடியோ விவகாரத்தில் ஜி.எஸ்.டி. வரியை பற்றி விஜய் கொளுத்தி போட அப்போதுதான் இது ஆரம்பமாக தொடங்கியது. பா.ஜ.க.வை விமர்சித்ததும் வழக்கம்போல் முதல் ஆளாக வந்து  மூத்த தலைவர் எச்.ராஜா தன் எதிர்ப்பை "ஜோசப் விஜய்" என்று பதிவு செய்தார்.

ஆக விஜய்யின் பா.ஜ.க. மீதான விமர்சனங்கள் தலைமையை கோபப்படுத்தி வரும் அதே வேளையில், அக்கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டினையும், கருத்தினையும் ரஜினி பேட்டிகள் மூலம் வலுவாகவே தெரிவித்து வந்தார். இந்த போக்குதான் "ரஜினி அரசியல் அண்டு விஜய் அரசியல்" என்ற தனி பாணியை ஏற்படுத்தியது.

2 முறை விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடத்தப்பட்ட ரெய்டில் ஒரு ரூபாய் கூட அதிகாரிகள் விஜய் வீட்டில் கைப்பற்றவில்லை என்பதே அவரது நேர்ர்மைக்கு சான்றாக அமைந்தது. பா.ஜ.க. தரப்பில் ரஜினியை தூக்கி வைக்கவும், ரஜினிக்கான ஆதரவை தெரியப்படுத்தவும் விஜய்யை தேவையில்லாமல் குற்றவாளி போல் சித்தரித்து, பரபரப்பை கூட்டி, ரசிகர்களை டென்ஷன் ஆக்கி, கடைசியில் ரெய்டு புஸ்வானமானது. இதைதவிர உள்ளாட்சித் தேர்தலிலும் கணிசமான அளவுக்கு ரசிகர்கள் வெற்றி பெற்றது விஜய் தரப்புக்கு மேலும் கிடைத்த ஒரு வெற்றி என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த சமயத்தில்தான் ரஜினி, விஜய் அரசியலின் வருகையும் ஒப்பீடும் மக்களால் அதிகமாக கவனிக்கப்பட்டது. மாஸ்டர் பட விழாவில் எப்படியும் விஜய் பேசுவார். அந்த பேச்சை வைத்து அரசியல் ஆக்கி அவரை டேமேஜ் செய்யலாம் என்று சிலர் கனவு கண்டு கொண்டிருந்தனர். ஆனால் அதிலும் மண்ணை ேபாட்டார் விஜய். அவர் என்னத்தையாவது பேசியிருந்தால் கூட பரவாயில்லை, வழக்கம்போல குட்டிக்கதையை சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. எதுவுமே பேசாமல் போகவும் தான் சிலருக்கு பொறுக்கமுடியாமல் போய்விட்டது. ஆனால் அவர் பேசுவதை எல்லாம் விஜய் சேதுபதி பேசிவிட்டு போனதுதான் மாஸ்டர் பிளானின் திருப்பம்.

ரஜினியின் பரபரப்பு பேட்டிகள் ஒன்றிரண்டு வந்து கொண்டே இருக்கும் நிலையில்தான், விஜய்யின் மவுனம் உருத்த தொடங்கியது.. ரஜினி பேச்சு,  விஜய்யின் மவுனம் இதை வைத்து ஒரு கணிப்பு நடத்தப்பட்டது."அரசியல் களத்தில் யாருக்கு சிறப்பான எதிர்காலம் இருக்கு" என்பதுதான் கேள்வி. ரஜினிகாந்த் என்ற ஆப்ஷனுக்கு 17.87சதவீதம் பேரும், விஜய் என்ற ஆப்ஷனுக்கு 39.55 சதவீதமும் ஆதரவு தெரிவித்தனர். இருவருக்குமே உண்டு என்பதற்கு 2.32 சதவீதம் பேரும், இருவருக்கும் நடிப்பு மட்டும் போதுமானது என்பதற்கு 40.26 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இதில் 2 விஷயங்கள் கவனிக்கத்தக்கது. முதலாவதாக, நடிகர்கள் அரசியலுக்கு வர தேவையில்லை. அவர்கள் அவர்களது வேலையை பார்த்தாலே போதும் என்ற மனநிலைதான் இதில் முக்கியமாக வெளிப்படுகிறது. ரஜினி, விஜய் யாராக இருந்தாலும், அவர்களின் நடிப்புக்கு தாங்கள் ரசிகர்களே தவிர என்றுமே தொண்டர்களாக விருப்பமில்லை என்பதுதான் இதன் அர்த்தமாகிறது.

இன்னொரு விஷயம், ரஜினியைவிட விஜய்க்கு ஆதரவு அமோகமாக உள்ளது.. இது யாருமே எதிர்பாராதது. ஆட்சி வேறு, கட்சி வேறு, மக்கள் கடல், சுனாமி என்று எந்த நம்பிக்கையில் பேசி கொண்டிருக்கிறார் என தெரியவில்லை. ஆனால், எதுவுமே பேசாமல் விஜய்க்கு இவ்வளவு ஆதரவு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. ரஜினிக்கு வாக்கு குறைய நீண்ட இழுபறி அரசியல் வருகை, சர்ச்சை பேட்டிகள், கற்பனையில் அரசாங்க திட்டங்கள் போன்றவை காரணமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் மற்றும் அவரது ரசிகர்கள், மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரு முக்கியமான விஷயம், ரஜினிக்கு ஆதரவான வாக்கு 17.87 சதவீதம் விழுந்துள்ளது, அதேபோல நடிப்பு மட்டுமே போதுமானது என்பதற்கும் 40.26 சதவீதம் பதிவாகி உள்ளது. இவை இரண்டையும் கூட்டி கழித்து பார்த்தால் ரஜினிக்கு 22.39% நடிப்பு மட்டுமே என்றும், விஜய்க்கு 0.71% மட்டுமே நடிப்பு  என்பதை காட்டுகிறது. இதனால் ரஜினி முதல்வராக வர மக்கள் விரும்பவில்லை என்பதையே இந்த புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

தலைப்புச்செய்திகள்