Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்

மார்ச் 20, 2020 04:53

கரூர்: கரூர் அரசு மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் டாக்டர்கள் நர்சுகள் சிரமமடைந்தனர்.
கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 200-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சுழற்சி முறையில் வார்டு உதவியாளர் காவலாளி  துப்புரவு பணி போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அந்த தொழிலாளர்களை நிர்வகிக்கும் பொறுப்பை மேலாண்மை செய்து வந்த நிறுவனம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாமல் இழுத்தடித்து வந்ததால் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்தநிலையில் பணிக்கு வந்த அந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு  மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்து போராட்டம் நடத்தினார்கள்.

தகவலறிந்தகரூர் டவுன் போலீசார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஒப்பந்த பணியாளர்களை நிர்வகிக்கும் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது  விரைவில் சம்பள பணத்தை பெற்று தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். எனினும் சம்பளத்தை பெற்ற பின்னர் தான் தாங்கள் பணிக்கு வருவோம் எனக்கூறி அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

இதனால் அரசு மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. மருந்து பெறும் இடம் உள்ளிட்டவற்றில் நோயாளிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வார்டு உதவியாளர்கள் உள்ளிட்டோர் இல்லாததால்  மருத்துவர்கள்  நர்சுகள் உள்ளிட்டோரும் சற்று சிரமத்திற்கு ஆளாகியதை காண முடிந்தது.

தலைப்புச்செய்திகள்