Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தங்குவதற்கு இடம் கேட்டு திடீர் போராட்டம்: வட மாநிலத்தவர்களால் பரபரப்பு

மார்ச் 23, 2020 10:41

சென்னை: தங்குவதற்கு இடம் கொடுங்கள் என போலீசாருடன் வாக்குவாதம் செய்து  வடமாநிலத்தவர்கள் சென்டிரல் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

மக்கள் ஊரடங்கு காரணமாக ரயில் நிலையங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ரயில் நிலையத்துக்குள் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் சென்டிரல் ரயில் நிலையம் வந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான வடமாநில பயணிகள் ரயில் நிலையத்துக்கு வெளியே காத்து கிடந்தனர். 

முதலில் ஒரு நாள் மட்டும் ரயில்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்ததால்  ஒரு நாள் முழுவதும் காத்திருந்து  மறுநாள் ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்லலாம் என அவர்கள் நினைத்திருந்தனர்.ஆனால் இந்த ரயில் ரத்து 31-ந்தேதி வரை நீட்டிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த வடமாநில பயணிகள் திடீரென சென்டிரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸ்  ரயில்வே போலீஸ் மற்றும் பூக்கடை போலீசார் என 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர். மேலும் அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர். ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் வருகிற 31-ந்தேதி வரை உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கொடுங்கள் என போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வாகனம் மூலம் வடமாநிலத்தவர்கள் அனைவரையும் அருகில் உள்ள சமுதாய நலக்கூடம்  மண்டபத்துக்கு அழைத்து சென்று தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.

தலைப்புச்செய்திகள்