Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர் உற்பத்தி செய்யும் பணிகள்: சேர்மன் அதிரடி அறிவிப்பு

மார்ச் 23, 2020 10:48

புது டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை ஏற்று, இந்தியாவில் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில், மிகப்பெரிய தொழில் நிறுவனங்களும் களம் இறங்கியிருப்பது கவனம் பெற்றுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா தற்போது அதிரடியான சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

இதன்படி மஹிந்திரா குழுமம் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை தொடங்கவுள்ளது. மேலும் மஹிந்திரா ஹாலிடே ரிசார்ட்ஸ் வசதிகள், தற்காலிக சிகிச்சைகளுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த அறிவிப்புகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருவதால், தங்களது சொந்த தொழிற்சாலைகளில் வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை உடனடியாக தொடங்கும்படி, மஹிந்திரா குழுமத்திற்கு ஆனந்த் மஹிந்திரா அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக தனது 100 சதவீத சம்பளத்தையும் ஆனந்த் மஹிந்திரா வழங்கவுள்ளார். கொரோனா வைரஸ் போன்ற மிக அபாயகரமான பிரச்னைகளை எதிர்கொள்ளும் நாட்டிற்கு, வலுவான மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தேவை. மருத்துவ உபகரணங்களும் அதிக அளவில் தேவைப்படும். இதனால்தான் ஆனந்த் மஹிந்திரா இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளதாவது:

தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்க வேண்டிய தேவை நமக்கு உள்ளது. அத்துடன் நம்மிடம் வென்டிலேட்டர்களின் பற்றாக்குறையும் காணப்படுகிறது. முன்னெப்போதும் சம்பவிக்காத இந்த அச்சுறுத்தலை சமாளிப்பதற்கு தேவைப்படுகின்ற உதவிகளை மஹிந்திரா குழுமம் வழங்கும். இதன் ஒரு பகுதியாக மஹிந்திரா குழும தொழிற்சாலைகளில், வென்டிலேட்டர்களை உற்பத்தி செய்யும் பணிகளை நாங்கள் உடனடியாக தொடங்குவோம். இவ்வாறு ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார்.

இதே போன்று கனடாவில் உள்ள வாகன தொழிற்சாலைகளிலும், மருத்துவ உபகரணங்களை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு கனடா அரசு சார்பில் உதவிகள் செய்யப்படும் எனவும் அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்