Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஏப்ரல் முதல் வாரம் முதல் ரேஷன் கார்டுக்கு ரூ.1,000: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் அறிவிப்பு

மார்ச் 25, 2020 10:00

சென்னை: தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் தினமும் டோக்கன் அடிப்படையில் 100 பேர் வீதம் ரூ.1000 வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் வீட்டில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாற்றக் கூடியவர்கள் வீட்டில் இருந்தபடி பணி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியில் நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சுகாதார நெருக்கடியில் மக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். இதனால் ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரே‌ஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

மேலும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி பெறக்கூடிய அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் ஏப்ரல் மாதம் இதனை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.3,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவு வழங்கல் துறை அதிகாரிகள் இதனை எப்படி வழங்குவது?, பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் வினியோகிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. டோக்கன் கொடுத்து எளிதாக பெறவும் வழிமுறை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 2 கோடியே, ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து, 993 அரிசி பெறக்கூடிய குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் ரே‌ஷனில் ரூ.1,000 ரொக்கமும், உணவு பொருட்களும் வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 34 ஆயிரம் ரே‌ஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் ரொக்கப் பணமும், அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணை போன்ற பொருட்களும் நெரிசல் இல்லாமல் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு வழங்க அறவுறுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இந்த உதவி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தினமும் 100 குடும்ப அட்டைகள் வீதம் ரொக்கம் மற்றும் பொருட்கள் வழங்கப்படும். ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் அதிகபட்சமாக 1,500 குடும்பங்கள் பொருட்கள் வாங்குகின்றன. அந்த அடிப்படையில் 15 நாட்களுக்குள் பணம், ரே‌ஷன் பொருட்களை இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்காமல் இடைவெளி விட்டு நின்று பணமும், பொருளும் வாங்கி செல்ல திட்டமிடப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் எவ்வளவு ஒதுக்கீடு வழக்கமாக செய்யப்படுமோ அதே அளவு இலவசமாக வழங்கப்படும். மார்ச் மாதம் ரே‌ஷன் பொருட்கள் வாங்காமல் இருந்தால் அதனை பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

அரசு வழங்கும் ரூ.1,000 ரொக்கம் மற்றும் ரே‌ஷன் பொருட்கள் பெற விருப்பம் இல்லாதவர்கள் சிவில்சப்ளை இணையதளத்தில் சென்று “வாங்க விரும்பவில்லை” என்று குறிப்பிடலாம். அதற்கான வசதி வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ரே‌ஷன் கடை பணியாளர்களும் பொதுமக்களுக்கு இதனை முறையாக வினியோகிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்களுக்குரிய நாள் மற்றும் நேரத்தில் கடைக்கு சென்று பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால் தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ? என்று பயப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்