Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோள் விடுத்த அதிகாரி காலில் விழுந்த இளைஞர்

மார்ச் 25, 2020 01:29

சென்னை, மார்ச்.26: சென்னை அண்ணாசாலையில் எச்சரிக்கையை மீறி வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளிடம், போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டு உருக்கமாக வேண்டுகோள் விடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நேற்று முன் தினம் இரவு 12.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால் தேவையின்றி பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் அதையும் மீறி சிலர் இரு சக்கர வாகனங்களில் சாலையில் சுற்றுகின்றனர். 
ஆனாலும் ஊரடங்கின் மகத்துவத்தை உணராமல், தனிமைப்படுத்துதல் குறித்த அவசியத்தை உணராமல் கூடும் நிலை உள்ளது. மாவட்டம் முழுவதும் இதே நிலை உள்ளது. பல இடங்களில் போலீஸார் வாகன ஓட்டிகளை நயந்தும், கண்டிப்புடன் கூறியும், அறிவுரை சொல்லியும் அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் அருகே ஒரு நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு நடந்தது. அதாவது, அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னலில் பணியாற்றும் ரஷீத் என்கிற போக்குவரத்து உதவி ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் உருக்கமாக வேண்டுகோள் வைத்தார். வெளியே யாரும் நடமாடாதீர்கள். உங்களைக் கையெடுத்து கும்பிடுகிறேன். தயவுசெய்து வீட்டில் இருங்கள். நீங்கள் அனைவரும் தெய்வம் போன்றவர்கள். ப்ளீஸ் எனக்காக, உங்களுக்காக, நமக்காக வராதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சியடைந்தனர். ஒரு இளைஞர் பைக்கை நிறுத்திவிட்டு இறங்கி வந்து போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷீதின் காலில் விழுந்தார். பின்னர் வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். ரஷீத் தனது பணியைத் தொடர்ந்தார்.
அவர் அதன் பின்னரும் வருகிற அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி கையெடுத்துக் கும்பிட்டு வேண்டுகோளை வைத்தவண்ணம் இருந்தார்.
மற்ற மாநிலங்களில் போலீஸார் தடியால் முரட்டுத்தனமாக அடித்து விரட்டும்போது சென்னை மற்றும் மற்ற மாவட்ட போலீஸாரின் இந்த  அணுகுமுறை பொதுமக்களை சிந்திக்க வைத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்