Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கலை மக்கள் சமாளிக்கும் வகையில் கடன் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு

மார்ச் 27, 2020 01:57

புது டெல்லி, மார்ச்.28:
கொரோனா வைரஸால் 21 நாட்கள் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கும் வகையில் கடனுக்கான ரெப்போ வட்டி வீதத்தை 5.15 சதவீதத்தில் இருந்து 75 புள்ளிகள் குறைத்து 4.4 சதவீதமாக வட்டி வீதத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயித்தது.
கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பொருளாதார ரீதியான பாதிப்பால் நிதிக்குழுக் கூட்டத்தை முன்கூட்டியே ரிசர்வ் வங்கி கூட்டியது. இந்த வட்டிக் குறைப்பு மூலம் வீடு, வாகனக் கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் தவணையில் வட்டி குறைய வாய்ப்புள்ளது.

அதுமட்டுமல்லாமல் பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தொழில் நிறுவனங்கள் வங்கியில் கடன் பெற்றிருந்தால், அந்த கடனுக்கான மாத்த தவணையை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் அளிக்கப்படும்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த 21 நாட்களும் தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை முடங்கும் சூழல் ஏற்படும். அதனால் பொருளாதாரச் சுணக்கம் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டது.

இதையடுத்தது நேற்று முன்தினம் 1.70 லட்சம் கோடி மதிப்பில் பொருளாதார நிதித் தொகுப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில் நேற்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி கந்த தாஸ், தொழில்துறையினருக்கும், மக்களுக்கும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அது குறித்த விவரம் வருமாறு:
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் சிக்கி இருப்பதால் அதை எதிர்கொள்ள இயல்பான மற்றும் இயல்புக்கு மாறான ஆயுதங்கள் தேவை. அசாதாரண சூழலில் இருக்கிறோம்.
சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார மந்த நிலை இந்தியாவிலும் எதிரொலிக்கும், பாதிக்கும். அதிகமான உணவுப்பொருட்கள் உற்பத்தியால் உணவுப்பொருட்கள் விலை இனிமேல் குறையக்கூடும்.

அனைத்து வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் மார்ச் 28-ம் தேதி முதல் 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு 3 சதவீதமாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் 1.37 லட்சம் கோடி ரூபாய் சந்தையில் புழங்கக்கூடும்.
ரிசர்வ் வங்கி அறிவிக்கும் அறிவிப்புகள் மூலம் சந்தையில் ரூ.3.74 லட்சம் கோடி ரொக்கப்பணம் இனிவரும் காலத்தில் புழக்கத்துக்கு வரும்.

வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு 3 மாத அவகாசத்தை அனைத்து வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் வழங்கிட வேண்டும். தேசிய வங்கிகள், மண்டல வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், வீடு கட்ட நிதி வழங்கும் நிறுவனங்கள், கிராம வங்கிகள், நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இந்த அவகாசத்தை பெற்ற தனி நபர்கள், நிறுவனங்களை அவர்களின் கடன் தர சிபில் ஸ்கோரில் சேர்க்கக் கூடாது.

இந்தியாவின் வங்கி முறை பாதுகாப்பாக இருக்கிறது. மக்களின் டெபாசிட் தொகை பாதுகாப்பாக இருக்கிறது. ஆதலால் மக்கள் பதற்றமடைந்து வங்கிகளில் இருந்து டெபாசிட் பணத்தை எடுக்க வேண்டியது இல்லை.
இவ்வாறு கவர்னர் சக்த கந்த தாஸ் தெரிவித்தார்.


ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை பொருளாதாரத்தை பாதுகாக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கைகள் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நமது பொருளாதாரத்தை பாதுகாக்கும். இந்த அறிவிப்பின் மூலம் நமது நாட்டின் பணபுழக்கம் ஏற்படவும், வட்டி விகிதங்கள் குறைந்து பணம் கிடைக்கவும் வழிவகுக்கும். நடுத்தர மக்களுக்கு, தொழில் செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.’’ என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்