Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

22-ந்தேதிக்குள் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை

மார்ச் 08, 2019 06:36

சென்னை: 22-ந்தேதிக்குள் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2019-ம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக 14 லட்சத்து 30 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 13 லட்சத்து 96 ஆயிரத்து 274 விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் ஏற்கப்பட்டன. 

மேற்கண்ட புதிய வாக்காளர்களுக்கு வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் புதிய வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் வினியோகம் செய்ய ஏதுவாக, தரவுகள் பெறப்பட்ட 10 நாட்களுக்குள் சட்டமன்ற தொகுதியின் பகுதி வாரியாக வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்பந்ததாரர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வாக்காளர் அடையாள அட்டைகள் பெறப்பட்டவுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக, வாக்காளர்களிடம் இருந்து ஒப்புகை பெற்று வருகிற 22-ந்தேதிக்குள் வினியோகிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் போது படிவம்-8, படிவம்-8ஏ விண்ணப்பம் 3 லட்சத்து 41 ஆயிரத்து 620 வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்டன. அந்த வாக்காளர்கள் அருகில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் அரசு இ-சேவை மையத்தினை அணுகி உரிய கட்டணமான ரூ.25-ஐ மட்டும் செலுத்தி வண்ண புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவல் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தலைப்புச்செய்திகள்