Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாளியில் தண்ணீர், சோப்புடன் கிராம எல்லையில் சாவடி அமைத்த மக்கள்

மார்ச் 29, 2020 11:27

தஞ்சாவூர்: கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக தஞ்சாவூர் அருகிலுள்ள காசவளநாடுபுதூர் மக்கள் கிராம எல்லையில் சோதனைச் சாவடி அமைத்துள்ளனர்.

மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடி அமைத்துத் தணிக்கை செய்யப்படுவதைப் போல இக்கிராமத்திலும் கம்பில் கயிற்றைக் கட்டி திறந்து மூடப்படுகிறது.

வெளியிலிருந்து வரும் நபர்கள் அத்தியாவசியப் பொருட்களை விற்பவர்களாக இருந்தால் மட்டுமே கிராம இளைஞர்கள் கம்பை உயர்த்தி உள்ளே செல்ல அனுமதிக்கின்றனர்.

அவர்களுக்கும் கையில் சோப்புப் போட்டு கழுவிய பிறகே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக எல்லையிலேயே வாளியில் தண்ணீரும் சோப்பும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல கிராமத்திலுள்ள மக்களும் அத்தியாவசியத் தேவையில்லாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அத்தியாவசியத் தேவை இருந்தால் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறது. அதுவும் ஒரு முறை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இவர்கள் மீண்டும் ஊருக்குள் திரும்பி வரும்போது எல்லையில் சோப்புப் போட்டு கையைக் கழுவிய பிறகே உள்ளே செல்ல முடியும்.

இந்தக் கண்காணிப்புப் பணியில் அக்கிராமத்திலுள்ள இளைஞர்கள் சுழற்சி முறையில் ஈடுபட்டுள்ளனர். அரசின் ஊரடங்கு உத்தரவை முறையாகக் கடைப்பிடித்து வரும் இக்கிராமத்தை அரசு அலுவலர்களும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஊர் முழுவதும் கிருமி நாசினியும் தெளிக்கப்படுகிறது.

இதேபோல பட்டுக்கோட்டை அருகிலுள்ள புதுக்கோட்டை உள்ளூர் கிராம இளைஞர்களும் தங்களது ஊர் எல்லையில் சோதனைச் சாவடி போன்று அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்