Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் இயங்க தொடங்கியது உழவர் சந்தை

மார்ச் 29, 2020 11:34

திருச்சி: திருச்சி மாவட்டத்திலுள்ள உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து மத்திய பேருந்து நிலையத்தில் தென்னூர் உழவர் சந்தை சனிக்கிழமை முதல் இயங்கத் தொடங்கியது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக உழவர் சந்தைகளில் வரும் பொதுமக்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையில் உழவர் சந்தைகள் அனைத்தையும் பொது வெளி மைதானத்துக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி திருச்சி மாவட்டத்திலுள்ள தென்னூர் முசிறி துறையூர் திருவெறும்பூர் லால்குடி மணப்பாறை பகுதிகளைச் சேர்ந்த உழவர் சந்தைகளை பேருந்து நிலையத்துக்கும் கல்வி நிறுவன மைதானத்துக்கும் மாற்ற முடிவு செய்யப்பட்டது.

இதன்படி தென்னூர் உழவர் சந்தையானது திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு சனிக்கிழமை காலை இடம் மாற்றம் செய்யப்பட்டது. இங்கு முதல்கட்டமாக 21 கடைகள் இயங்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் சதுரங்கள் வரையப்பட்டு அந்த எல்லைக்குள் நின்று மட்டுமே காய்கறிகளை வாங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல திருச்சி காந்திமார்க்கெட்டும் பொன்மலை ஜி.கார்னர் மைதானத்துக்கு (இன்று) திங்கள்கிழமை முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. காந்தி மார்க்கெட் வந்த மக்களுக்கு எச்சரிக்கை திருச்சி மாவட்டத்தின் பிரதான காய்கறிச் சந்தையாக விளங்கும் காந்தி மார்க்கெட்டுக்கு சனி ஞாயிறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் மட்டுமே இரவு நேரத்தில் வர அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சனிக்கிழமை காலை வியாபாரிகள் பொதுமக்கள் என பலரும் வழக்கம்போல காந்தி மார்க்கெட்டுக்கு வந்திருந்தனர். 

போலீஸார் அவர்களைத் தடுத்து அனுப்பியும் பல்வேறு வாயில்கள் வழியாக உள்ளே வந்தவர்களை போலீஸார் சிறிதுநேரம் நிற்க வைத்து எச்சரித்தும் அனுப்பினர்.
 

தலைப்புச்செய்திகள்