Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘கண்டிப்பா கடையை திறக்க மாட்டோம்’ டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்ட அறிவிப்பு

மார்ச் 30, 2020 11:06

சென்னை: “இன்று முதல் 2 மணி நேரம் டாஸ்மாக் கடை திறந்திருக்கும் என்று வரும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்று டாஸ்மாக் நிர்வாகம் பொதுமக்களுக்கு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு காரணமாக மார்ச் 24ம் தேதியுடன் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக 24ம் தேதி மாலை 6 மணி உடன் டாஸ்மாக் கடைகள் உள்பட அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டன. அன்று 6 மணி நேரமே மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், அந்த 6 மணி நேரத்தில் மட்டும் 211 கோடி ரூபாய்க்கு மது விற்பனையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் அடைப்பால் குடிக்க முடியாமல் புலம்பி வருகிறார்கள். கேரளாவில் உச்சகட்டமாக மது அருந்த முடியாததால் 7 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் மதுப்பிரியர்கள் மீண்டும் கடை திறக்க அரசு உத்தரவிடாதா? என்று ஆவலில் உள்ளனர்.

வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கும் அவர்கள் கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில பரவிய தகவலால் உற்சாசம் அடைந்தனர். அந்த வாட்ஸ் ஆப் தகவலில் நாளை (இன்று) முதல் தினமும் 2 மணி நேரம் மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், இது முற்றிலும் வதந்தி என டாஸ்மாக் நிர்வாகம் மறுத்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “நாளை (இன்று) முதல் டாஸ்மாக் கடைகள் 2 மணி நேரம் செயல்படும் என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தியே. இது போன்ற எந்த அறிவிப்பையும் அரசு அறிவிக்கவில்லை. ஏற்கனவே அரசு அறிவித்தபடி ஏப்ரல் 14ம் தேதி வரை டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். டாஸ்மாக் மற்றும் மதுக்கடைகளை திறப்பது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என்று கூறினார்.

தலைப்புச்செய்திகள்