Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

போலி செய்திகளை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் யோசனை

மார்ச் 31, 2020 11:50

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் அரசின் நடவடிக்கை தொடர்பாக பரப்பப்படும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக அரசு அவ்வப்போது தகவல் தெரிவித்து, மக்களிடம் விழிப்புடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தவண்ணம் உள்ளது. 

அதேசமயம், கொரோனா பரவல் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து பீதியை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவிடுவதும் அதிகரிக்கிறது. அவர்களை அடையாளம் கண்டு போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். 

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் புலம்பெயரும் தொழிலாளர்களின் நலன் குறித்து உச்ச நீதிமன்றத்தில் கேரளா மற்றும் மேற்கு வங்க எம்பி.க்கள் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி நாகேஸ்வர ராவ் ஆகியோர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த வழக்குகளை விசாரித்தனர்.

அப்போது நாடு முழுவதும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான குடிநீர், உணவு மற்றும் மருந்துகளை ஏற்பாடு செய்ய வேண்டும், அந்த முகாம்களை நிர்வகிக்கும் கடமையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், போலி செய்திகள் மூலம் பரவி வரும் பீதியை எதிர்கொள்ளவும், போலி செய்திகளை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த நிகழ்நேர தகவல்களை வெளியிடுவதற்காகவும், 24 மணி நேரத்திற்குள் மத்திய அரசு ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரச்சனையை அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்கள் மேலும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதுதொடர்பாக பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை அரசு வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றங்களில் தெரியப்படுத்த வேண்டும் என்றும்  நீதிபதிகள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்