Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஒத்துழைக்காத சமாஜ்வாதி அரசு: பிரதமர் மோடி

மார்ச் 08, 2019 07:50

வாரணாசி: வாரணாசியில் வளர்ச்சி பணிகளுக்கும், நகரை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு, உ.பி.,யில் ஆட்சி செய்த சமாஜ்வாதி அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரதமர் மோடி கூறினார். 

உ.பி.,யில் உள்ள தனது தொகுதியான வாரணாசிக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தில் விரிவாக்க கட்டிடம் கட்டும் பணி உள்ளிட்ட பல பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, கோவிலில் வழிபாடு நடத்தினார்.பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது  உ.பி.,யில் ஆட்சியில் இருந்த சமாஜ்வாதி அரசு, மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.,ஆட்சி அமைந்த பின்னர் தான், வளர்ச்சி திட்டங்கள் துவக்கப்பட்டன. முந்தைய அரசு ஒத்துழைப்பு கொடுத்திருந்தால், தற்போது இந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கு பதில் துவக்கி வைக்கப்பட்டிருக்கும்.  

கடந்த 70 ஆண்டுகளாக, கடவுள் சிவன் பற்றி எந்த அரசும் எண்ணிப்பார்க்கவில்லை. அவர்கள் தங்களது நலத்தை பற்றி மட்டுமே சிந்தித்தனர். ஆனால், இந்த இடத்தை பற்றி கவலைப்படவில்லை.காசி விஸ்வநாதர் கோவிலில் பணிகளை துவக்கி வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பகுதிக்காக பணிகளை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. நான் அரசியலில் இல்லாத போதும், இங்கு பலமுறை வந்துள்ளேன். இங்கு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நான் எண்ணினேன்.  

நான் அதிகமாக பேசுவதால், இங்கு வந்து பணிகளை செய்ய வேண்டும் என கடவுள் சிவன் முடிவு செய்தார். அவரது ஆசிர்வாதத்தால், பணிகளை துவக்கி வைத்து அவரது எண்ணத்தை நிறைவேற்றினேன். முதல்முறையாக பழமையான கோவில் அருகே இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கோவிலில் வளர்ச்சி பணிகளுக்காக தங்களது உடைமைகளை அளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 
எதிரிகளால், இந்த கோயில் அழிக்கப்பட்டாலும், மக்களின் நம்பிக்கை காரணமாக கோயில் மீண்டும் உருவானது. இங்கு செய்யப்படும் பணியானது, நவீன தொழில்நுட்பம் மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கோவில்களை காப்பதற்கும், புனரமைப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும். இது, உலகளவில் காசிக்கு புதிய அடையாளத்தை கொடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்