Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காய்கறி அங்காடியாக மாறிய புதுச்சேரி பஸ் நிலையம்!

மார்ச் 31, 2020 12:12

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காததால், நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த பெரிய மார்க்கெட் மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இயங்கி வந்த காய்கறி கடைகள் இன்றுமுதல் புதிய பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் புதுச்சேரியில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பால், மளிகை, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் புதுச்சேரியில் அத்தியாவசியப் பொருள்களான மளிகை, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் உள்ளனர்.

கூட்டம் கூட்டமாக வழக்கம் போல நடமாடி வருகின்றனர், கூடி வருகின்றனர். இதனால் புதுச்சேரியில் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில், புதுச்சேரி மாநிலத்திற்கான மொத்த காய்கறி தேவைகளை பூர்த்தி செய்து வரும், சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நேரு வீதியில் இயங்கி வரும் பெரிய மாா்க்கெட் நேற்றுமுதல் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

பெரிய மார்க்கெட் பகுதியில் இயங்கிவந்த காய்கறி கடைகள் நேற்று முதல் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று காலை முதல் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கறி மார்க்கெட் அமைக்கப்பட்டது. இங்கு ஏராளமான மொத்த வியாபாரிகள், வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

காய்கறிகளை வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் சில்லரை வியாபாரிகள் சமூக இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்பதற்காக, ஒரு மீட்டர் இடைவெளி விட்டு குறியீடு வரையப்பட்டுள்ளது. இந்தக் குறியீட்டில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மேலும் பொதுமக்கள் கூட்டமாக குவிந்து காய்கறிகளை வாங்கினால், விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

இதனால் வியாபாரிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வரிசையில் நின்றால் மட்டுமே காய்கறிகள் வழங்கப்படுமென பொதுமக்களுக்கு கண்டிப்புடன் கூறி, பொதுமக்களை ஒழுங்குபடுத்தி காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். தற்போது பேருந்து நிலையத்தில் காய்கறி விற்பனை நடைபெறுவதால் மக்கள் கூட்டம் ஓரளவிற்கு தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் பெரிய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த மளிகைக் கடைகள் மட்டும் வழக்கம்போல் அங்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலா்கள், வியாபாரிகள் சங்கத்தினா், காவல் துறையினா் சமூக இடைவெளியை உறுதிப்படுத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்