Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரடங்கிற்கு கட்டுப்படாத புதுச்சேரி மக்கள்: 3 கம்பெனி துணை ராணுவம் விரைகிறது!

மார்ச் 31, 2020 12:13

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மூன்று கம்பெனி துணை ராணுவப் படை வீரர்கள் புதுச்சேரி வர உள்ளனர்.

புதுச்சேரி அரசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த 24ம் தேதி முதல் புதுச்சேரி முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை 85 சதவீத மக்கள் கடைப்பிடித்தாலும், ஆபத்தை உணராமல் இளைஞா்கள் மற்றும் ஒரு சில பொதுமக்கள் வாகனங்களில் தேவையின்றி வீதிகளில் சுற்றி வருகின்றனா்.

இதனால் இருசக்கர வாகனம் மற்றும் காா்களில் வலம் வரும் இளைஞா்களை போலீசார் தொடா்ந்து எச்சரித்து வருகின்றனா். மேலும், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் வாக்குவாதங்களும் ஏற்படுகிறது.

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 323 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 893 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை புதுச்சேரி மக்கள் மதிக்காவிட்டால், புதுச்சேரிக்கு துணை ராணுவத்தினர் வரவழைக்கப்படுவார்கள் என மாநில முதல்வர் நாராயணசாமி கடந்த சில நாட்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, 3 கம்பெனி துணை ராணுவம் புதுச்சேரிக்கு வரவுள்ளது. ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் 3 கம்பெனி துணை ராணுவத்தை அனுப்பி வைக்குமாறு புதுச்சேரி காவல்துறை உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. இதன்பேரில் இன்னும் 2 நாட்களில் 3 கம்பெனி துணை ராணுவப் படையினர் புதுச்சேரி வர உள்ளனர்.

இவர்கள் புதுச்சேரியின் முக்கிய சந்திப்புகள், காய்கறி அங்காடிகள், எல்லைப் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். புதுச்சேரிக்கு துணை ராணுவத்தினர் வரவுள்ளதையொட்டி, மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மின்துறை ஊழியர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு அடையாள அட்டைகளை தருவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தலைப்புச்செய்திகள்