Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் நிதிக்கு ரூ.1,031 கோடி வழங்கும் எண்ணெய் நிறுவனங்கள்

ஏப்ரல் 01, 2020 04:41

புதுடில்லி: கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவிக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1,031 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளன.

கொரோனா பாதிப்புக்கான நிவாரண உதவி வழங்க, மத்திய அரசு, PM-CARES Fund எனப்படும், குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதியத்தை துவக்கியுள்ளது. இதில் திரட்டப்படும் தொகை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்.

மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது வேண்டுகோளை ஏற்று பிரபலங்களும், நிறுவனங்களும், பொதுமக்களும் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் நிதிக்கு, எண்ணெய் நிறுவனங்கள், ரூ.1,031 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளன.

இதுகுறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: பிரதமர் நிதிக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.1031.29 கோடி பங்களிப்பு வழங்குவது மகிழ்ச்சியையும், நன்றியையும் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் அவசர கால நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த ஓ.என்.ஜி.சி., ரூ.300 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐ.ஓ.சி., ரூ.225 கோடியும், பாரத் பெட்ரோலியம் ரூ.175 கோடியும், இந்துஸ்தான் பெட்ரோலியம் ரூ.120 கோடியும் வழங்குகின்றன.

பெட்ரோநெட் எல்.என்.ஜி., ரூ.100 கோடியும், கெயில் ரூ.50 கோடியும், ஆயில் இந்தியா ரூ.38 கோடியும் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளன.

தலைப்புச்செய்திகள்