Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அரியாங்குப்பத்தை சீலிட்ட அதிகாரிகள்

ஏப்ரல் 01, 2020 05:52

புதுச்சேரி, டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட புதுச்சேரியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் வசித்த அரியாங்குப்பம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.


டெல்லியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தப்லீகீ ஜமாஅத் என்னும் இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேர் பங்கேற்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. சோதனையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள இரண்டு நபர்களும் புதுச்சேரி அருகே உள்ள அரியாங்குப்பம் சொர்ணா நகரை சேர்ந்தவர்கள். தற்போது அவர்கள் இருவருக்கும் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்கள் வசித்த வீடு சீல் வைக்கப்பட்டு, அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் அரியாங்குப்பம் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டு, காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரும் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


தற்போது புதுச்சேரியில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

ஏற்கனவே கேரள மாநிலம் அருகே உள்ள புதுச்சேரியின் மாஹே பிராந்தியத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்