Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாட்ஸ்-அப் மூலம் மது விற்பனை: 4 வாலிபர்கள் கைது காரைக்கால் மதுபான குடோனுக்கும் சீல்!

ஏப்ரல் 01, 2020 06:36

புதுச்சேரி
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மதுபானங்களை வீட்டில் பதுக்கி வைத்து வாட்ஸ்-அப் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்துவந்த நான்கு இளைஞர்கள் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதேபோல் காரைக்கால் பகுதியில் குடோனிலிருந்து விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற ரூபாய் 55 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, குடோனுக்கு சீல் வைத்தனர். 


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அத்தியாவசிய பொருட்களான, மளிகை, காய்கறி, மருந்தகம், பெட்ரோல் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.


மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது பிரியர்கள் கள்ளத்தனமாக விற்கும் சரக்குகளை தேடி செல்கின்றனர். இவர்களுக்காகவே புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் மதுவிற்பனை நடைபெறுவதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.


அதன்படி சிறப்பு அதிரடிப்படை உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் ஆட்டுப்பட்டி பகுதிக்குச் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் ஆண்கள் அதிகளவில் வந்து சென்றதை கண்டனர். இதையடுத்து அதிரடியாக அந்த வீட்டிற்குள் சென்ற போலீசார், அங்கு 4 வாலிபர்கள் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்ததை கண்டனர்.


போலீசாரை கண்டதும் அங்கிருந்த நான்கு வாலிபர்களும் தப்பியோடினர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார், அவர்களிடமிருந்து மது பாட்டில்கள், ரூபாய் 8,350 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்தனர்.  மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சுதாகர், அரவிந்த், ரஜினி, பெரியார் நகர் பழனி என்பது தெரியவந்தது.


மேலும் அவர்கள் வாட்ஸ்அப் மூலம் 70 ரூபாய் மதிப்புள்ள குவார்டர் பாட்டிலை 150 ரூபாய்க்கும், 80 ரூபாய் மதிப்புள்ள பீர் பாட்டிலை ரூபாய் 200 க்கும் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்கள் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதேபோன்று காரைக்காலில் ஒரு தனியார் மதுபான குடோனிலிருந்து விற்பனைக்கு எடுத்து செல்ல முயன்ற ரூபாய் 55 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்தனர். இதனையடுத்து அந்த குடோனுக்கும் சீல் வைக்கப்பட்டது. 

தலைப்புச்செய்திகள்