Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பரவலுக்கு பிரதமர் மோடியே காரணம்; கே.எஸ்.அழகிரி கண்டுபிடிப்பு

ஏப்ரல் 01, 2020 07:13

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியே கொரோனா பரவலுக்குக் காரணமாகி விட்டார் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், “உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய் 170 நாடுகளில் பரவி 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 31 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டு 32 பேர் பலியாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124. நேற்று ஒரே நாளில் 57 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.

வரலாறு காணாத வகையில் கடுமையான பாதிப்பை இந்தியா சந்தித்து வருகிறது. இதனால் ஏற்படப்போகிற விளைவுகள் குறித்து மிகுந்த தீவிர தன்மையோடு இப்பிரச்சினையை மத்திய,மாநில அரசுகள் அணுகினவா என்பதை ஆய்வு செய்கிற போது மிகுந்த வேதனை தான் மிஞ்சுகிறது.

சீனாவில் இறுதியாக பிப்ரவரி 29 ஆம் தேதி 3,150 பேர் உயிரைப் பறிகொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு சீனாவில் உயிரிழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் நிகழ்ந்த வைரஸ் உயிரிழப்புகளை பார்த்த பிறகு இந்திய அரசு விழித்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், மார்ச் 4 ஆம் நாள் தான் வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வருகிற பயணிகளை பரிசோதிக்கிற நடவடிக்கையை நரேந்திர மோடி அரசு எடுத்தது.

இந்நிலையில், கடந்த மார்ச் 24 ஆம் தேதி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுத்ததாக தெரியவில்லை. அனைத்து தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், சிறு, குறு தொழில்கள், உணவகங்கள் என அனைத்துத் துறைகளும் மூடப்பட்டன.

இந்தியாவில் உள்ள ஏறத்தாழ 43 கோடி அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்ததாக தெரியவில்லை. நாடு முழுவதும் 14 கோடி தொழிலாளர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து உணவு கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கானோர் டெல்லியிலிருந்து சொந்த ஊர்களுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் நடந்தே செல்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இதை முன்கூட்டியே அறிந்து திட்டமிட்டு அவர்களுக்கு தங்குமிடத்தையும், உணவையும் மத்திய அரசு ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? பேருந்துகளிலும், அதன் மேல் பகுதிகளிலும், லாரிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாக பயணம் செய்ததன் விளைவாக, தொற்றுநோயை தங்கள் கிராமத்துக்குக் கொண்டு சென்று பரப்புகிற மிகக் கொடூர நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆனால், மத்திய அமைச்சர் ஜவடேகரோ, சாவகாசமாக எந்த சலனமும் இல்லாமல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரைப் பார்த்து களிப்படைகிறார். நாடு தீப்பற்றி எரிந்தபோது ரோம் நாட்டு மன்னன் பிடில் வாசித்த கதைதான் நமக்கு நினைவுக்கு வருகிறது.

சமூகப் பரவல், தனிமைப்படுத்துதல் பற்றி தொலைபேசியில் உரையாற்றிய நரேந்திர மோடியே தொற்று நோய் பரவலுக்குக் காரணமாக இருந்துவிட்டார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல், தமிழ்நாட்டில் கரோனா நோய் தடுப்பு ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

ஆனால், அதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்திருக்கிறார். ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதனை முதல்வர் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட மறுத்த தமிழக முதல்வரை வன்மையாக கண்டிக்கிறேன்.

கொரோனாவை எதிர்கொள்ள கேரள அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. நரேந்திர மோடி அரசு 15 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக அரசு 3 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளன. இத்தகைய குறைவான நிதியாதாரத்தை வைத்துக்கொண்டு தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களையும் எடப்பாடி பழனிசாமி அரசால் காப்பாற்ற முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகும். இவற்றுக்கு உரிய தீர்வை காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்