Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சாலையோரம் உணவின்றி உட்கார்ந்திருந்த முதியவர்: காப்பகத்தில் சேர்த்த அமைச்சர் ஜெயக்குமார்

ஏப்ரல் 01, 2020 10:43

சென்னை: சென்னை துறைமுகம் பகுதியில் காய்கறி கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார் வழியில் உணவின்றி உட்கார்ந்திருந்த ஒரு முதியவருக்கு சாப்பாடு வாங்கி தந்து உடனடியாக காப்பகத்தில் அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி வருகிறது. இதை தவிர, அந்தந்த தொகுதி முக்கிய பிரமுகர்களும் வைரஸ் தொற்று பரவாமல் இருக்கும் நடவடிக்கைகளில் இறங்கி வருகின்றனர். அந்த வகையில்  மாநகராட்சி ஊழியர்களுடன் சேர்ந்து மீன்வளத் துறை அமைச்சரும், ராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஜெயக்குமார், தனது தொகுதியில் மிஷினில் கிருமிநாசினியை தெளித்தார்.

இந்நிலையில், சென்னை துறைமுகம் பகுதியில் காய்கறி கடைகளுக்கு சென்று விட்டு வீட்டிற்கு அமைச்சர் ஜெயக்குமார் திரும்பி கொண்டிருந்தார். அப்போது வழியில் துறைமுகம் தொகுதி கிளைவ் பகுதி அருகே ஒரு முதியவர் உட்கார்ந்திருந்தார். எப்படியும் 80 வயது இருக்கும். முகமெல்லாம் வாடி இருந்தது. சாப்பிட்டு நாள் கணக்கில் இருந்ததை போல சோர்வுடன் காணப்பட்டார்.

இவரை பார்த்த அமைச்சர், உடனே காரை நிறுத்திவிட்டு, முதியவர் அருகில் சென்று உட்கார்ந்தார். அமைச்சரை பார்த்ததும் தாத்தா வணக்கம் சொன்னார். ஜெயக்குமாரும் பதில் வணக்கம் தெரிவித்து, ஒரு மாஸ்க்கை தந்து அவரை போட சொன்னார். உடனிருந்தவர்களிடம் சாப்பாடும், தண்ணீரும் கொண்டு வர சொல்லி அவருக்கு தந்தார். ஒரு சால்வையும் வழங்கிய அமைச்சர், தாத்தாவுக்கு செலவிற்கு பணமும் தந்தார். பிறகு மாநகராட்சி அதிகாரிகளுக்கு போன் செய்து முதியவர் பற்றின தகவலை சொல்லி உடனடியாக காப்பகத்தில் அனுமதிக்குமாறும் உத்தரவிட்டார்.

அந்த முதியவர் பெயர் திருநாவுக்கரசு என்பதும், ஐ.சி.எப். பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அமைச்சரின் இந்த செயல் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்