Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரஸ் ஸ்டிக்கர்  வாகனங்களை சோதனை செய்ய உத்தரவு: போலி நிருபர்கள் மீது கடுமையான நடவடிக்கை 

ஏப்ரல் 01, 2020 06:47

ஊரடங்கை பொருட்படுத்தாமல் ஊர் சுற்றித்திரியும் போலி நிருபர்கள்...

நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டாலும், அத்தியாவசிய தேவைகள் உட்பட ஊடகத்துறையினருக்கும் அனுமதி கொடுத்துள்ளது அரசு.  ஆனால் இந்த மோசமான சூழ்நிலையிலும் கூட போலி நிருபர்களின் அராஜகப் போக்கு குறைந்தபாடில்லை.

பத்திரிகை என்று கூறினால் ஒரு காலத்தில் மிகப்பெரிய மதிப்புமிக்க, மக்களுக்கான உண்மையான பயனுள்ள தகவல்களை தெரிவிக்கின்ற, பல்வேறு   திருப்பங்களை ஏற்படுத்துகின்ற ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இருந்தது. ஆனால் இப்போது மக்களின் நம்பகத்தன்மையை இழந்து மிக மிக  மோசமான நிலைக்கு  தள்ளப்பட்டு விட்டது. 

நம் நாட்டில் சிறந்து விளங்கிய தலைவர்க ளின் வாழ்க்கையைக் கூர்ந்து பார்த்தால், அவர்கள் ஏதேனும் ஓர் இதழை நடத்தியவர்களாக இருப்பர். அண்ணல் காந்தியடிகள் இந்தியன்  ஒபீனி யன், யங் இந்தியா, நவஜீவன், ஹரிஜன் போன்ற இதழ்களை நடத்தி நாட்டு மக்களைப் போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தியுள்ளார். 

மகாகவி பாரதியார் சுதேசமித்திரன், இந்தியா, சக்கரவர்த்தினி, பால பாரதா, விஜயா போன்ற இதழ்களின் வாயிலாகச் சுதந்திரக் கனலை  வளர்த்துள்ளார். தமிழ்த்தென்றல் திரு.வி.க. தேசபக்தன், நவசக்தி என்னும் ஏடுகளால் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டு புரிந்துள்ளார். சுதந்திரப்  போராட்டக் காலத்தில் வெளி வந்த இதழ்களின் நோக்கம் நாடு சுதந்திரம் பெறுவதுதான். அவற்றில் உண்மை ஒளிர்ந்தது. ஆனால், நாடு விடுதலை  பெற்றபின் கட்சிகளுக்கு ஆட்சியைப் பிடிப்பதே நோக்கம் ஆயிற்று. அதனால், ஒன்றை ஒன்று குறைகூறும் நிலை உண்டாயிற்று. அடுத்தவர் மீது  சேற்றை வாரி இரைக்க முற்பட்டனர். 

தங்கள் செல்வாக்கைச் சரியாமல் காத்துக் கொள்ளக் கட்சிகளுக்கு நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் தவிர்க்க இயலாத தேவைகள் ஆகிவிட்டன.  அரசியல்வாதிகள் சிலர் பணத்தாலோ வேறு உதவியாலோ  செல்வாக்குள்ள ஏடுகள் சிலவற்றைத் தங்களுக்கு இணக்கமாகச் செயல்படும்படி செய்துவிடுகின்றனர். 

இதன் விளைவு இதழ்களின் நேர்மை குலைந்துபோகிறது. இன்றைய சூழலில் பல ஊடங்கங்கள் லட்சங்களையும், கோடிகளையும் கொட்டக்கூடிய  அளவிற்கு தங்களுடைய நிலைப்பாட்டை முற்றிலும் மற்றி  செயல்படுகின்றன என்பதை யாராலும் மறுக்க முடியாது.  பத்திரிகை சுதந்திரம்  என்கிற பெயரில் ஒரு எல்லையை தாண்டி பலரின் குரல்வளையை  பிடித்து இறுக்கும் நிலைக்கு கூட சில ஊடகங்கள் செயல்படுகிறது.  

அதிலும் அச்சு ஊடகத்தில் இதழ்கள் நடத்துவதாக கூறி, அதை வைத்து முறை கேடான தொழில்கள் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு  நாள்  அதிகரித்துக் கொண்டே வருகிறது. 

500 ரூபாய்க்கு பிரஸ்கார்டு... வாங்கசார் வாஙக...

பத்திரிகை துறைக்கு வரவேண்டும், சாதிக்க வேண்டும் என்று எண்ணி அந்த துறையில் அடியெடுத்து வைக்க போராடி வாய்ப்புக்கள் கிடைக்காமல்   போனவர்கள் பலர். அப்படியே ஒரு பகுதிநேர நிருபராக வாய்ப்பு கிடைத்து உள்ளே வந்தாலும் அதில் ஒரு அடையாள அட்டைப் பெற வேண்டுமா  னால்  குதிரைக் கொம்பாக இருந்த நிலை மாறி தற்போது 500 ரூபாய்க்கு கூவி கூவி  விற்பனை செய்கிறார்கள் சிலர். 

இதழ்களில் தொடர்ந்து இடம்பிடிக்கும் போலி நிருபர்கள்:

நாளிதழ்களை புரட்டினால் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த போலி நிருபர்கள் கைது, பாலியல் தொழில் நடத்தி வந்த போலி நிருபர்,   தொழிலாளி கொலையில் போலி நிருபர் கைது, பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலி பத்திரிகையாளர் கைது வாலிபரிடம்   செல்போன் பறிப்பில் ஈடுபட்ட போலி நிருபர் உட்பட 2 பேர்  கைது, நகராட்சி கமிஷனரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்த போலி   பத்திரிகையாளர் குண்டர் சட் டத்தில் கைது, பெட்ரோல் பங்கில் பெண்கள் உடைமாற்றும் வீடியோக்களை எடுத்து யூடி யூப்பில் வெளியிட்ட நிருபர்   கைது, தனியார்  நிறுவன  உரிமையாளரிடம் பணம், சென்னையில் போலீசாரை மிரட்டிய போலி  பத்திரிகையாளர்  கைது, மிரட்டி  பணம் வசூல்  செய்த போலி நிருபர் கைது, பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்ட போலி பத்திரிகையாளர் கைது  என............................. செய்திகள் வந்து கொண்டே  இருக்கிறது.

போலிகளை அடையாளம் காணமுடியாமல் தவிக்கும் போலீசார்:

போலி யார்? அசல் யார் என்று அடையாளம் கண்டுக் கொள்ள முடியாமல் பொதுமக்கள் தவிப்பது ஒருபுறம் இருந்தாலும் அரசியல் பிரமுகர்கள்   தொடங்கி அரசாங்க அதிகாரிகள் வரை அனைவருக்குமே இது பிரச்சனையாகத்தான் உள்ளது. தி.நகரில் இயங்கும் தனியார் ஜவுளிக் கடைக்குள்   சென்றுவிட்டு 1000 பேர் வெளியில் வந்தாலும் அதில் ஓரிருவரை மட்டும் டக்கென்று நிறுத்துவார் வாயிற்க்காவலர்.  

திரும்பி பார்த்தால் கடை  உள்ளே இருந்து வந்தவர் எதாவது பொருட்களை மறைத்து எடுத்து வந்திருப்பார். அதை சரியாக பார்த்து கண்டு பிடிப்பார்  வாயிற் காவலர். அதற்காக  அவர் எந்த பயிற்சிக்கும் சென்றது கிடையாது. அவருக்கே திருடர்களை பிடிக்க தெரிந்த போது, சிறந்த காவல்துறையாக  செயல்படும் தமிழக  காவல்துறைக்கு போலியை கண்டுபிடிக்க முடிய வில்லை என்பது வருத்தமான  விஷயம்தான்.

முறைகேடான தொழிகளுக்கு துணைபோகும் போலிகள்!

குற்றங்களுக்கு ஒரு  துணையாக இருந்து மக்களை பாதாளத்தில் தள்ளுவதற்கு போலி  பத்திரிகையாளர்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. 

மொத்தத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க,  முறைகேடான தொழிகள் செய்ய, தன்னை பெரிய ஆளாக காட்டிக் கொள்ள, தன்னுடைய  தொழிலை பெருக்கி கொள்ள என இப்படி பல  விஷயங்களையும் தாங்கிப்பிடிக்க போலியான பத்திரிகையாளர்களுக்கு ஒரு கேடயமாக  பயன்படுத்தப்படுகிறது இந்த பத்திரிகையாளர் என்கிற  அடையாள அட்டை. தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகை வந்தாலும் தீபாவளிக்கு  தேய்த்துக் குளிக்கும் எண்ணெயில் இருந்து பொங்கல்  பானையில்  ஊற்றும் நெய் வரை அனைத்துமே அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் ஏன்  போலீசார்கள் மூலம் கூட போலியான பத்தி ரிகையாளர்கள்   வீட்டிற்கே சென்று விடுகிறது என்பது கூடுதல் தகவல். 

வீதிக்கு ஒரு பத்திரிகையாளர் சங்கம்!

பல துறைகளிலும் அவர்களின் பணி பாதுகாப்பிற்காக சங்கங்கள் செயல் படுகிறது. அதேபோல பத்திரிகையாளர்க ளின் பணி பாதுகாப்பிற்காக ஒரு  கட்டத்தில் சங்கம் தொடங்கப்பட்டது. புற்றீசல்போல் பத்திரிகை யாளர்கள் பெயரில் போலியான சங்கங்களும் அதிகமாகி வருகின்றன. இந்தப் போலி   சங்கங்கள், பகுதிவாரியாக சிலருக்கு நிருபர் அடையாள அட்டையைக் கொடுத்து அவர்களுக்கு சங்க நிர்வாகப் பதவிகளையும் கொடுக்கின்றன. தற்போது 4 போலி நிருபர்கள் ஒன்று சேர்ந்தால் ஒரு சங்கம் என்கிற நிலை வந்து விட்டது. 

போலி நிருபர்கள் முறைகேடான செயல்களை செய்ய  அவர்களுக்கான ஒரு முழுபாதுகாப்பு கவசமாக இருப்பது இந்த போலி பத்திரிகையாளர்  சங்கங்கள்தான். இதுபோன்ற போலி பத்திரிகையாளர்கள்,  போலி சங்கங்களை கட்டுப்படுத்த தைரியமாக யார் நடவடிக்கை எடுக்க போகிறார்கள்  என்பது ஒரு கேள்விக்குறியாகதான்?

சாலையில் செல்லும் வாகனத்தில் நூற்றில் குறைந்தது 10 வாகனத்திலாவது பிரஸ் என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர்கள் யார், எந்த   பத்திரிகையில் பணி செய்கிறார்கள் என்றால்.. அதற்கான விடை கிடைக்காது. அதோடு ஒரே வாகனத்தில் ஒரு புறத்தில் பிரஸ் ஸ்டிக்கர், மறுபுறத்தில்  வழக்கறிஞர் ஸ்டிக்கர், அதோடு மனித உரிமைகள் கழகம், சங்கம் என்கிற பெயரில் கூடுதலாக ஒரு ஸ்டிக்கர்.  அவர் வழக்கறிஞரா, பத்திரி  கையாளரா  அல்லது சமூக சேவகரா என்று விசாரித்தால் எதற்கும் விடை கிடைக்காது.

விருது தருகிறோம் வாங்க... தலா 25,000 ரூபாய்... 

வருடத்திற்கு 2 விழாக்கள் நடத்தி, விருது வழங்குகிறோம், கௌரவப்படுத்துகிறோம் என்று கூறி, அரசியல்வாதிகளையும், ஓய்வு பெற்ற   நீதிபதிகளையும், அரசு அதிகாரி களையும் அழைத்து கௌரவிப்பது போலி பத்திரிகையாளர்களின் ஒரு பொழுது போக்கு மாதிரி ஆகிவிட்டது. அரசுத்  துறைகளில் பணியிட மாற்றம் வாங்கித் தருவது, அரசு ஒப்பந்தங்கள் வாங்கித் தருவது என இந்தச் சங்கங்கள் வசூல்வேட்டையும்  நடத்துவ தாகவும்  புகார்கள் குவிகின்றன. 

போலிகளின் விழாக்களுக்கே சென்று போலிகளை கட்டுப் படுத்தவேண்டும் என்று மேடை யாளர்கள் பேசுவது  வேடிக்கையிலும் வேடிக்கை. விருது  தகுதி, திறமைக்கு கிடையாது.. பணத்திற்கு மட்டுமே.... 25,000 கொடுத்தால் தான் விருது கொடுப்பார் களாம்.  10,000 கொடுத்தால் அதற்கு தகுந்த  மாதிரி. காசுக்கு ஏற்ற தோசைப்போல்தான் இவர்கள் வழங்கும் விருதுகளும்.... 

உயர்நீதிமன்றம் செவிகளுக்கு எட்டியது போலிகளின் பித்தலாட்டம்! 

சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், உண்மையான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசு  அங்கீகார  அடையாள அட்டை வழங்க வேண்டும், பத்திரிகைத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்துவிட்டது என  நீதிபதிகள்  எச்சரித்துள்ளனர். இது நேர்மையான பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.  

பத்திரிகையாளர் என்ற பொறுப்பை மோசடிப் பேர்வழிகள் பலர் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்,  மஞ்சள்   பத்திரிகை நடத்துபவர்களும் தங்களைப் பத்திரிகையாளர் எனக் கூறிக் கொள்வது வருத்தத்துக்குரியது. பத்திரிகைத் துறையில் உள்ள கருப்பு ஆடுகளை வெளியேற்றும் நேரம் வந்து விட்டது என  நீதிபதிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது உலகமே கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உட்பட்டு போராடி வருகிறது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினப்பத்திரிகைளை தவிர மற்ற பத்திரிகை அலுவலகங்களில் வேலைகளை அவரவர்கள் வீடுகளில் இருந்தே  பார்த்து வருகிறார்கள்.  

ஆனால் இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் கூட போலி நிருபர்களின் அராஜகப் போக்கு தொடர்ந்து கொண்டு இருக்கிறது என புலம்பி தவிக்கிறார்கள்  போலீசார். வெளிவராத பத்திரிகை பெயரை சொல்கிறார்கள் எதாவது கேட்டால் எதிர்த்து பேசி பிரச்சனை செய்வதாக கூறுகிறார்கள். இந்நிலையில் ’கலைஞர் பாதை’ என்ற பெயரில் வெளிவராத ஒரு பத்திரிகையின் நிருபர் என்று கூறிக் கொண்டு திரிந்த ஒரு போலி நிருபர் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.துணை கமிஷனர் செந்தில் கூறும்போது, 

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலான நிலையில், அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து வீட்டில் இருக்க வேண்டும். அதை விடுத்து, அத்தியாவசியப் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்படும் விதிவிலக்கை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவது தெரிய வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பத்திரிகையாளர் போர்வையில் இன்று ஒருவர் சிக்கியுள்ளதால், பத்திரிகை, ஊடகம், பிரஸ் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிவரும் வாகனங்களை முழு ஆய்வுக்குட்படுத்தி, போலி என தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  

இதைப்போலவே தமிழகம் முழுவதும் முழு ஆய்வு மேற்கொண்டால் பல போலி நிருபர்களை போலீசார் அடையாளம் காணலாம். ஜனநாயகத்தின் நான்காவது தூண் வலுவிழந்துவிடாமல் இருக்க அரசும், காவல் துறையும் தைரியமாக போலி பத்திரிகையாளர்களின் மீது உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் கோரிக்கையாக உள்ளது.

- சிகரம் ரேகா

தலைப்புச்செய்திகள்