Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லி மாநாடு விவகாரத்தை மதப்பிரச்னையாக்க வேண்டாம்: பாஜ., தலைவர் முருகன் வேண்டுகோள்

ஏப்ரல் 02, 2020 05:35

சென்னை: இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் டில்லி மாநாடு விவகாரத்தை மதப் பிரச்னையாக்க வேண்டாம் என தமிழக பாஜ., தலைவர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் மத அமைப்பு சார்பில் மத குருக்கள் பங்கேற்ற கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பல மாநிலத்தை சேர்ந்தோர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பலருக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜ., தலைவர் முருகன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் கொரோனா பரவலை தடுத்திட மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், டில்லி நிஜாமுதீனில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து சென்றிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், தமிழகத்திற்கு திரும்பி இருப்பதாக தெரியவந்துள்ளது.

மாநாட்டின் போதும், பயணத்தின் போதும் ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளால் சம்பந்தப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அந்தந்த மாவட்ட நிர்வாகத்தினரால் சிலரை தொடர்பு கொள்ள முடிந்தது எனவும், சிலரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தகவல் வெளியானதால், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை யாரும் அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் எனவும், கொரோனாவுக்கு எதிரான மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மாநில அரசும் மக்கள் நலன் கருதி இவர்கள் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், இதில் அரசியல் மத பிரச்னைகளை யாரும் உட்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். பிரச்னையின் ஆழத்தை உணர்ந்து இஸ்லாமிய அறிஞர்கள் அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்