Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியிலிருந்து 179 மலேசியப் பயணிகள் சிறப்பு விமானம் மூலம் அனுப்பி வைப்பு

ஏப்ரல் 02, 2020 10:24

திருச்சி: திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவைச் சேர்ந்த 179 பயணிகள் சிறப்பு விமானம் மூலம் தங்களது நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட நாடுகளுக்கான விமானசேவையை மத்திய அரசு முற்றிலுமாக ரத்து செய்துள்ளது. இதில் மலேசியாவும் ஒன்று.

இதன் காரணமாக மலேசியாவுக்கு செல்ல முடியாமல் தமிழகத்தில் தவிக்கும் தங்கள் நாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்ல மலேசிய வெளியுறவுத் துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து 3 சிறப்பு விமானங்கள் மூலம் மலேசிய பயணிகளை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலிருந்த மலேசிய நாட்டுப் பயணிகள் சிறப்பு அனுமதி பெற்று வாகனங்கள் மூலம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி புதன்கிழமை இரவு 10.35 மணிக்கு மலேசியாவிலிருந்து மலிண்டோ விமானம் திருச்சி வந்தடைந்தது. குடியேற்றம் மற்றும் சுங்கத்துறை நடைமுறைகளை முடித்த பின்னர் 179 பயணிகளுடன் இந்த விமானம் இரவு 11.35 மணிக்கு மலேசியா புறப்பட்டுச் சென்றது.

ஏப்ரல் 2, 4 ம் தேதி காலை 9.45 மணிக்கு திருச்சி வரும் மலிண்டோ சிறப்பு விமானங்களின் மூலம் மொத்தம் 360 பயணிகள் மலேசியா செல்வர். இந்த விமானங்கள் இரு நாட்களிலும் காலை 10.45 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

தலைப்புச்செய்திகள்