Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா தடுப்பு பணிக்கு வராத அரசு மருத்துவமனை ஊழியர்கள் 54 பேர் நீக்கம்

ஏப்ரல் 03, 2020 09:38

புதுச்சேரி: கொரோனா வைரஸ் சிறப்பு பிரிவு செயல்பட்டு வரும் புதுச்சேரி அரசின் இந்திராகாந்தி அரசு மருத்துவமனைக்கு பணிக்கு வராத 54 ஊழியர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 700 படுக்கைகள், வெண்டிலேட்டர்களுடன் கொரோனா சிகிச்சைக்காக தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள 4 பேர் மற்றும் கண்காணிப்பில் உள்ள 28 பேரும் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கதிர்காமம் அரசு மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்ற உத்தரவு பிறப்பித்தது. இதை அவர்கள் ஏற்க மறுத்திருந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் 54 ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இவர்கள் அனைவரையும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் அதிரடியாக பணியிலிருந்து நீக்கியுள்ளார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவித்திருப்பதாவது:

புதுச்சேரி இந்திராகாந்தி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு பணிகளை இங்குள்ள பணியாளர்கள் புறக்கணிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். அத்துடன் மருத்துவக்கல்லூரி முதல்வர் அளித்த புகாரில் கடந்த 2 ம் தேதி 54 பேர் பணிக்கு வரவில்லை. இதனால் கொரோனா தடுப்பு சிகிச்சை பணிகளில் மருத்துவமனைகளில் பிரச்சினை உருவானது.

பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பணி மற்றும் கவனக்குறைவாக செயல்படுவோர் மீதான நடவடிக்கை பற்றி தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வராத 54 ஒப்பந்த தொழிலாளர்களும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப்படுகின்றனர். கொரோனா தடுப்பு பணிகளை சுமூக முறையில் மருத்துவமனையில் நிறைவேற்ற இத்தடுப்பு நடவடிக்கை தேவை. அதேபோல் பணிக்கு வராதோரை நீக்கி அதுதொடர்பான விவரங்களை சமர்பிக்க வேண்டும்.
இவ்வாறு ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்