Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வார இறுதி நாளில் இறைச்சி கடைகள் மூடல்: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

ஏப்ரல் 03, 2020 09:48

சென்னை: கொரோனாவை தடுப்பதற்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கும் நடைமுறைக்கு பேராபத்தை ஏற்படுத்துவதால் வார இறுதி நாட்களில் அனைத்து இறைச்சி கடைகளையும் மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நாட்டின் பல பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கடைகளில் கூட்டமாக கூடுவது தொடர்கிறது. காய்கறி சந்தைகளில் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் முண்டியடித்துக் கொண்டு பொதுமக்கள் நிற்கத்தான் செய்கின்றனர். 

அதுவும் கடந்த வாரம் வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் பெருமளவில் அலைமோதியது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த வீடுகளுக்குள் முடங்கி இருங்கள் என்ற அரசின் உத்தரவு காற்றில் பறந்தது. மேலும் 1 கிலோ ஆட்டுக்கறியின் விலை அதிகபட்சமாக ரூ1,250 வரை விற்பனையானது. 

சீண்டுவார் இல்லாமல் இருந்த கோழிக்கறியின் விலையும் பல மடங்கு கூடியது. 1 கிலோ மீனின் விலை குறைந்தபட்சம் ரூ.200 என இருந்தது. இந்நிலையில் இந்த வார இறுதியில் இப்படியான நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது.

ஆகையால், தமிழகத்தில் பல நகரங்களிலும் வார இறுதி நாட்களில் இறைச்சி கடைகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் அதிரடியாக உத்தரவிட்டுள்ளன. மணப்பாறை நகராட்சி இன்று சனி மற்றும் ஞாயிறு இறைச்சி கடைகள் இயங்காது என அறிவித்துள்ளது. 

திருச்சி மாவட்டம் சனி, ஞாயிறு நாள் முழுவதும் இறைச்சி கடைகளை  மூடி தனிநபர் இடைவெளியை கடைபிடித்து கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

தலைப்புச்செய்திகள்