Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியில் பல்வேறு மசூதிகளில் தங்கியிருந்த தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கண்டுபிடிப்பு

ஏப்ரல் 04, 2020 08:38

புது டெல்லி: டெல்லியில் 15க்கும் மேற்பட்ட மசூதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த மதப் பிரச்சாரகர்களைக் கண்டுபிடித்துள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் இந்த வெளிநாட்டவர்களால் எங்கும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இவர்கள் மசூதிகளிலேயே தங்கியிருந்தனர். மருத்துவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் பலர் பல்வேறு மசூதிகளில் பிரிந்து தங்கியிருப்பதாக டெல்லி சிறப்புப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து டெல்லியில் பல்வேறு மசூதிகளிலும் போலீஸார் நடத்திய சோதனையில் வெளிநாட்டினர் 500 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து டெல்லி குற்றவியல் சிறப்புப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “தப்லீக் ஜமாத் மாநாட்டுக்கு வந்து சென்ற வெளிநாட்டினரைத் தேடும் பணியை தீவிரப்படுத்தினோம். அப்போது டெல்லியில் மட்டும் ஏறக்குறைய 15 முதல் 16 மசூதிகளில் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு உறுப்பினர்கள் தங்கியிருந்ததை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற முடியாத சூழலில் அங்கேயே தங்கிவிட்டனர். இவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் உள்ளூர் பகுதி மக்கள் செய்துள்ளனர். டெல்லியில் உள்ள அனைத்து மதரஸாக்கள், மசூதிகளுக்கும் தப்லீக் ஜமாத் சார்பில் வெளிநாட்டினர் தங்குதல், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியின் வடகிழக்குப் பகுதி, தென்கிழக்குப் பகுதி, தென் மாவட்டங்கள், மேற்கு டெல்லி ஆகிய புறநகர் மாவட்டங்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த மதப்பிரச்சாரகர்கள் தங்கியிருந்தனர்’’ எனத் தெரிவித்தனர்.

டெல்லி ரோஹினி மாவட்டத்தின் கூடுதல் காவல் ஆணையர் சங்தார் மிஸ்ரா நிருபர்களிடம் கூறுகையில், “தப்லீக் ஜமாத் விவகாரத்தில் கடந்த மாதத்தின் கடைசி நாட்களில் பல முக்கியத் தகவல்களை டெல்லி அரசுக்கு அனுப்பியுள்ளோம். வெளிநாட்டு மதப் பிரச்சாரகர்களைச் சந்தித்துச் சென்ற டெல்லி வாழ் மக்களையும் தேடி வருகிறோம். அவர்கள் டெல்லியை விட்டு எங்கும் செல்ல முடியாது.

சமீபத்தில் 173 வெளிநாட்டு மதப்வ்பிரச்சாரகர்களைக் கண்டுபிடித்து அவர்களின் பெயர்ப் பட்டியலை டெல்லி அரசுக்கு அனுப்பினோம், இவர்கள் அனைவரும் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றதாக விசாரணையில் தெரிவித்ததால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்