Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சியில் 300 படுக்கைகளுடன் கொரோனாவுக்கு தனி வார்டு: மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவிப்பு

ஏப்ரல் 04, 2020 11:45

திருச்சி: திருச்சி மட்டுமில்லாமல், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை தர, மகாத்மாகாந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியை அதிகாரப்பூர்வ மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 300 படுக்கைகளுடன் கூடிய கொரோனாவுக்கான தனி வார்டு, தனித்தனி ரூம்கள் என தயாராகவுள்ளன.

தமிழகத்தில் கொரோனா தீவிரம் எடுத்து வரும் நிலையில், சுகாதார துறையினர் தங்களது பணியினையும் தீவிரப்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய்தொற்றுள்ளவர்கள் இருப்பதாக கண்டறியப்படுள்ளனர். ஆனால், அந்த 17 மாவட்டங்களில் கொரோனா சிகிச்சை அளிக்க சிறப்பு ஏற்பாடுகள் இல்லாமல் இருந்து வந்தது. 

இதையடுத்து, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழுவதும் 18 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரி ஆகும். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கான கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பையும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆஸ்பத்திரியை பொறுத்தவரை கொரோனா சிகிச்சைக்காக 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டு தயாராகிவிட்டது. இதைத்தவிர, கள்ளிக்குடி ஒருங்கிணைந்த காய்கனிகள் விற்பனை சந்தை கொரோனாவுக்கான தனிமைப்படுத்தல் முகாம் என்ற வகையில் சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இங்குதான் தனிமைப்படுத்தி கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருச்சி, அரியலூர், பெரம்பலூரண, புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு கொரோனா தொற்று தொடர்பான சிகிச்சை தர, மகாத்மாகாந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியை அதிகாரப்பூர்வ மருத்துவமனையாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவித்ததாவது:

கொரோனாவுக்கு 300 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டில் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களை கண்காணிக்க தனித்தனி ரூம்களும் தயாராகவுள்ளன. திருச்சி அரசு ஆஸ்பத்திரி, மணப்பாறை, ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் ஒட்டுமொத்தமாக 100 வென்டிலேட்டர்கள் தயாராக உள்ளன. மாநகரப் பகுதியில் இயங்கும் 7 தனியார் ஆஸ்பத்திரிகளில் 20 சதவிகித வென்டிலேட்டர்கள் எப்போதுமே தயாராக உள்ளது. 

10 படுக்கைகளில் ஒரு வென்டிலேட்டர் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் 300 படுக்கைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் உள்ளன. இதை தவிர, தொற்று குறித்து உறுதி செய்வதற்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் நவீன ஆய்வுக் கூடம் செயல்பட தொடங்கியுள்ளது. பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டால் 1077 என்ற எண்ணிலும் தொர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்