Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

‘மனித குலத்தின் எதிரிகளை விட மாட்டோம்’: யோகி ஆதித்யநாத் ஆவேசம்!

ஏப்ரல் 04, 2020 12:03

காசியாபாத்: டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு உத்தர பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் பெண் மருத்துவர்களிடம் மோசமாக நடந்து கொண்டதையடுத்து,  அவர்கள் மீது அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் அதிருப்தியில் உள்ளார்.

டெல்லி மேற்கு நிஜாமுதீன் பகுதியில் நடந்த தப்லிக் ஜமாத் கூட்டம் காரணமாக இந்தியாவில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு வழிபாட்டு தளத்தில்தான் இந்த கூட்டம் நடந்தது. மார்ச் 8 முதல் மார்ச் 15ம் தேதி இரவு வரை இந்த கூட்டம் நடந்தது. 

மத்திய அரசு இதில் கலந்து கொண்ட வெளிநாட்டினர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டிஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த 960 வெளிநாட்டினரின் விசாக்களை நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இவர்கள் விசா விதிமுறைகளை மீறிவிட்டதாக மத்திய அரசு கூறியுள்ளது. இவர்கள் மீது இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் இருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தற்போது கொரோனா காரணமாக காசியாபாத் எம்.எம்.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் சிலர் மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றியதாக புகார் எழுந்தது. மேலும் அவர்கள் பெண் மருத்துவர்கள், செவிலியர்களிடம் மோசமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. 

இதனால் மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. மேலும் இவர்கள் சிகிச்சைக்கு கட்டுப்படவில்லை. இவர்களை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து அவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 

இதகுறித்து முதல்வர் ஆதித்யநாத் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: அவர்கள் யாரும் சட்டத்தை மதிக்கவில்லை. அவர்கள் எங்கள் உத்தரவை பின்பற்றவில்லை. அவர்கள் மனித குலத்தின் எதிரிகள். அவர்கள் மீது நாங்கள் தற்போது தேசிய பாதுகாப்பு சட்டத்தை போட உத்தரவிட்டு இருக்கிறோம். அவர்கள் யாரையும் நாங்கள் விட மாட்டோம். அந்த கூட்டத்திற்கு சென்ற எல்லோரையும் தேடி வருகிறோம். 

அதேபோல் அவர்கள் மருத்துவமனையில் பெண் மருத்துவர்களிடம் மோசமாக நடந்து இருக்கிறார்கள். இதை கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியாது . எங்கள் மாநிலத்தில் இதற்கு முன் இப்படி நடந்தது இல்லை. இனியும் இப்படி நடக்க விட மாட்டோம். நாங்கள் சட்டத்திற்கு உட்பட்டு இவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போகிறோம். இவ்வாறு முதல்வர் ஆதித்யநாத் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்