Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காலை 6 மணியிலிருந்து நண்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு: இனி ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை; முதல்வர்

ஏப்ரல் 04, 2020 12:55

சென்னை, ஏப்.5: அத்தியாவசியப் பொருட்களை வாங்க வெளியே வருகிறேன் என பொதுமக்கள் வெளியில் சுற்றுவதைத் தடுக்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை இயங்கிய சந்தைகள், கடைகள் இனி நண்பகல் 1 மணி வரை மட்டுமே இயங்கும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பு: “கொரோனா பெருந்தொற்றினால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றுநோய் சமூகப் பரவலாக மாறுவதை தடுக்கும் பொருட்டு, சமூக விலகல் கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தருணத்தில் பெருந்தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசின் முயற்சிகளோடு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

எனவே, பல்வேறு சமயத் தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த இயக்கங்களின் ஒருமித்த ஆதரவினைக் கோர முடிவு செய்யப்பட்டு, எனது உத்தரவின்பேரில் பல்வேறு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், சமயத் தலைவர்களுடனான கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மாநில அளவிலும் அரசு சார்பில் தலைமைச் செயலாளர் தலைமையில் கடந்த (03/04) கிறித்தவ, இஸ்லாமிய, இந்து, ஜெயின் மற்றும் சீக்கிய மதத் தலைவர்களுடன் தனித்தனியே கூட்டம் நடத்தப்பட்டது.

மக்களிடையே கொரோனா தொற்றுநோயின் தீவிரப் பரவல் தன்மையையும், அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பாக, பெரியோர்கள், நோயுற்றவர்கள், குழந்தைகள் போன்றவர்களிடையே ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும் அரசு எடுத்துவரும் முயற்சிகளான, தனி மனித சுகாதாரம், தனிமைப்படுத்துதல், சமூக விலகல் போன்றவற்றை கடுமையாக கடைப்பிடிக்க அரசோடு பல்வேறு சமுதாயத் தலைவர்களும், அவர்கள் சார்ந்த தன்னார்வலர்களும் இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உரிய ஒத்துழைப்பு வழங்க இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேலும், கொரோனா பெரும் தொற்று நோயினால் மனித சமுதாயத்திற்கு ஏற்படவுள்ள ஆபத்து பற்றியும் எடுத்துரைத்து இந்நோய் பரவுதைத் தடுக்க அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், மனித சமுதாயமே தங்கள் வேறுபாடுகளை புறந்தள்ளி ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும், சமூக விலகல், தனிமைப்படுத்துதல் போன்ற முயற்சிகளுக்கு அந்தந்த சமுதாயத் தலைவர்கள் சமூக ஆர்வலர்களைத் திரட்டி அரசோடு ஒன்றிணைந்து நோய்வாய்ப்பட்டவர்கள், அவர்தம் குடும்பங்கள் மற்றும் நோயுற்றவரோடு தொடர்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்த உதவினால்தான் இந்த நோயிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும், இந்த நோய் சமூகப் பரவலாக மாறி மக்களிடையே பேரிழப்பை ஏற்படுத்துவதைத் தடுக்கவும் இயலும் என்றும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் எனது கோரிக்கை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் பல்வேறு மதத் தலைவர்களும் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டி, கொரோனா தொற்றுநோயைத் தடுக்க எடுக்கும் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்தார்கள். அவர்கள் எடுத்துரைத்த கருத்துகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட முடிவுகளை அரசு எடுத்துள்ளது.

* நோய்த்தொற்று பொதுமக்களுக்குப் பரவுவதைத் தவிர்க்க, பொதுமக்கள் எதிர்நோக்கும் பண்டிகைகள் காலத்தில், அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, மதம் சார்ந்த கூட்டங்களைத் தவிர்த்து சமூக விலகலைக் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* கொரோனா தொற்று நோய் சாதி, மத பேதமின்றி அனைவரையும் தாக்கக் கூடியதென்றும், இதற்கு மதச்சாயம் பூசுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றும், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் மக்கள் வெறுப்புணர்வுடன் பார்ப்பதைத் தவிர்த்து, இதுபோன்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும் என்பதை உணர்ந்து அத்தகையவர்களை அனைவரும் அன்போடும், பரிவோடும் நடத்தவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* பல்வேறு மாவட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் திறக்கப்படுவதில்லை என்று தெரிய வருவதால், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அனைத்து மருத்துவமனைகளையும் அழைத்துப் பேசி, அவை திறப்பதற்கும் செயல்படுவதற்கும் தேவையான பணியாளர்களை அனுமதிக்க, உரிய வாகன வசதிகளை ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
* தனியார் மருத்துவமனைகள், நோய்த் தொற்று உள்ளவர்களை பாரபட்சமின்றி, பரிவோடும் அன்போடும் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
* கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும், சில நோய்த்தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால், இதற்காக அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் (ழிஷீtவீயீவீமீபீ லீஷீsஜீவீtணீறீ யீஷீக்ஷீ சிளிக்ஷிமிஞி-19 tக்ஷீமீணீtனீமீஸீt) சிகிச்சை பெற அனுமதிக்கப்படுகிறது.
* அனைத்து மதத் தலைவர்களும் கோரியபடி, அவர்களின் ஆளுகையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கட்டிடங்களை தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக உரிய வசதிகளை அமைத்துப் பயன்படுத்திக்கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுகுறித்த தகவலை சென்னையில் மாநகராட்சி ஆணையரிடமும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் தெரிவிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
*· பல்வேறு மதத் தலைவர்கள் கேட்டுக்கொண்டபடி, வயதானவர்கள், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்களின் விவரங்கள் அறிந்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குவதற்கு அரசுடன் சேர்ந்து தன்னார்வத் தொண்டர்கள் இப்பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* காலை நேரங்களில் சந்தைப் பகுதிகளில் கூடுதல் கூட்டத்தைத் தவிர்க்கவும், கூடுதல் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யவும், தன் ஆர்வலர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கி பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அனைத்து மதத் தலைவர்களும், சமூகத் தொண்டர்களும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களுடனும், சென்னையில் மாநகராட்சி ஆணையருடனும் ஒருங்கிணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசியப் பொருட்களை வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதிக்கப்பட்டிருந்த கால அளவை இன்று ஞாயிற்றுக்கிழமை (5.4.2020) முதல் குறைத்து, காலை 6 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மட்டுமே அத்தியாவசியப் பொருட்களை வாங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதை அனைத்து பொதுமக்களும் கடைப்பிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்