Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாய பணிகளுக்கு செல்பவர்கள் மீது போலீஸ் தடியடி: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார்

ஏப்ரல் 05, 2020 07:57


திருச்சி: திருச்சி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகளும், விவாசய கூலித் தொழிலாளர்களும் காவல்துறையின் தடியடிக்கு ஆளாவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகார் கூறியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் அயிலை சிவசூரியன் ஆட்சியருக்கு கட்செவி அஞ்சல் மூலம் அனுப்பியுள்ள புகார் மனு;

திருச்சி மாவட்டம் முழுவதும் விவசாயிகள் விவசாய கூலி தொழிலாளர்கள் வேளாண் பணிகளுக்கு சென்று வரும்போது காவல் துறையினர் லத்தியால் அடிப்பதையும் வண்டி வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் குற்ற வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பது வாடிக்கையாக உள்ளது.

ஆதரவற்ற முதியோர் விதவைகளுக்கு மாதமாதம் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் உதவித்தொகை பெறும் நபர்களுக்கு 4 கிலோ அரிசி வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர்கள் சமூக நலத் துறை தனி வட்டாட்சியர் பரிந்துரை செய்தும் அரிசி வழங்கப்படுவதில்லை. 

ஆதரவற்ற வயதான விதவைகள் எந்த பணிக்கும் வெளியில் செல்ல முடியாத நிலையில் அவர்களுக்கு நியாய விலை கடைகளில் அரிசி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தைகள் மூடப்பட்டுள்ளதாலும் கிராமப் புறங்களில் உள்ள கடைகளில் காய்கனிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

எனவே மாநகரப் பகுதிகளில் குறைந்த விலைக்கு காய்கனிகள் வழங்குவதைப் போன்று கிராமப்புறங்களிலும் வழங்க வேண்டும். கால்நடை வளர்ப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ள விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி கால்நடைத் தீவனங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். தீவனங்கள் கொண்டுவரும் வாகனங்களை காவல்துறை தடுத்து நிறுத்துவதை கைவிட வேண்டும்.

தலைப்புச்செய்திகள்